கையடக்கத் தொலைபேசி பற்றறிகள் வெப்பமடைவது குறித்து நோக்கியா எச்சரிக்கை

Nokia.jpgBattery-2.jpgஉலகின் முன்னணி கையடக்கத் தொலைபேசி உற்பத்தி நிறுவனமான "நொக்கியா' அதன் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் பற்றறிகள் மின்சக்தியால் சக்தியூட்டப்படும் போது அதிக அளவில் வெப்பமடைவதாக கிடைத்த முறைப்பாடுகளையடுத்து தனது கையடக்கத் தொலைபேசிகளுக்காக புதிய 46 மில்லியன் பற்றறிகளை பதிலீடாக வழங்க முன்வந்துள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் முதற்கொண்டு 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை மட்ஸூஷிடா எலெக்றிக் இன்டஸ்றியல் கம்பனியால் உற்பத்தி செய்யப்பட்ட "நொக்கியா' வியாபார சின்னம் பொறிக்கப்பட்ட "பிஎல் 5 சி' பற்றறிகள் வாயிலாகவே இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

நொக்கியா நிறுவனம் அதிகளவில் பயன்படுத்தும் பற்றறி வகையாக "பிஎல் 5 சி' விளங்குகிறது. பல மில்லியன் கணக்கான பற்றறிகளுக்கான பதிலீடுகளை வழங்குவது நேரடி செலவுகள் சிலவற்றுடனான நிதியியல் பாதிப்பை ஏற்படுத்துகின்ற போதும் இச்செலவுகளின் ஒரு பகுதியை "மட்ஸூஷிடா' நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் என நொக்கியா நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

""உற்பத்தியில் இதுபோன்ற தவறுகள் இடம்பெறுவது மிக அரிதாகும் என மட்ஸூஷிடா நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர். உலகளாவிய ரீதியில் நொக்கியா பற்றறிகள் அதீத வெப்பமடைவதால் ஏற்பட்ட விபத்துகள் குறித்து சுமார் 100 வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதன்போது கடுமையான காயம் எதுவும் ஏற்பட்டதாக தெரியவரவில்லையெனவும் நொக்கியா ஸ்தாபனத்தினர் தெரிவித்தனர்.

அதேசமயம் ஏனைய உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்பட்ட 250 மில்லியனுக்கும் அதிகமான "பிஎல் 5 சி' பற்றறிகள் எதுவித பாதிப்பையும் எதிர்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

தாம் கொள்வனவு செய்த நொக்கியா கையடக்கத் தொலைபேசியின் பற்றறிகள் பாதிப்படைந்த நிலையிலுள்ளதாக உணரும் பாவனையாளர்கள் "நொக்கியாவின் வெப்தளத்தை பார்வையிட்டு மேற்கொண்டு என்ன செய்வது என்பது தொடர்பாக ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள முடியும் என நொக்கியா கம்பனி தெரிவித்துள்ளது.

"நொக்கியா' ஒரு நம்பிக்கையான வியாபாரச் சின்னம் என்பதை பாவனையாளர்களுக்கு உறுதிப்படுத்தும் முகமாகவே பதிலீட்டு பற்றறிகளை வழங்கும் இந்நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக நொக்கியா ஸ்தாபனத்தார் தெரிவிக்கின்றனர்.