இலங்கை அணி 119 ஓட்டங்களால் அபார வெற்றி! மஹ்ரூப் ஆட்டநாயகன்!

Cricket.jpg இலங்கை-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 119 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது. இப்போட்டி நேற்று (ஒக்டோபர் 01) இலங்கையின் தம்புள்ள ரங்கிரி விiயாட்டரங்கில் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. 50 ஓவர்கள் அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஏழு விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 269 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தின் போது அணியின் தலைவர் மஹேல ஜயவர்தன 66 ஒட்டங்களைப் பெற்றார்.

இங்கிலாந்து அணியின் களத்தடுப்பின் போது கொலிங்வூட், ரியன் சைட் பெட்டம், ஸ்டூவர்ட் புரோட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர். கிரேம் ஸ்வோன் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

பதிலுக்குக் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 34.4 ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 150 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

இலங்கை அணியின் களத்தடுப்பாட்டத்தின் போது பர்வேஷ் மஹ்ரூப் நான்கு விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். ஏனைய பந்து வீச்சாளர்களான தில்ஹார, மாலிங்க மற்றும் டில்ஷான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். இலங்கை அணியின் நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக பர்வேஷ் மஹ்ரூப் தெரிவுசெய்யப்பட்டார்.

ரங்கிரி தம்புள்ள விளையாட்டு மைதானத்தில் சுமார் இரண்டு வருடங்களுக்குப் பின்னர் சர்வதேசப் போட்டியொன்று நேற்று நடைபெற்றது. அங்கு நடைபெறும் 20வது சர்வதேச போட்டி இதுவாகும்.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே நேற்றைய போட்டியுடன் இதுவரை 41 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் இலங்கை அணி 20 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி 19 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. இரண்டு போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளன.

இறுதியாக இங்கிலாந்துடன் நடைபெற்ற ஆறு போட்டிகளில் தொடர்ச்சியாக இலங்கை அணி வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய விதிகளின்படி நோ போல் ஒன்றுக்கு ப்ரி ஹிட்| ஒன்றை வழங்குவதுடன் 38 ஓவர்களின் பின்னர் புதிய பந்தொன்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற விதிகள் இந்தப் போட்டியில் நடைமுறைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.