அமைதியான அந்த ஆளுமை சரிந்துவிட்டது.

Para_Master.jpgமரண அறிவித்தல்
பராமாஸ்ரர்’ என்று அறியப்பட்ட குமாரசாமி பரராசசிங்கம் அவர்கள் எம்மைவிட்டு பிரிந்துவிட்டார். இடதுசாரி பராம்பரியங்களின் எஞ்சியிருந்த தோழமைகளிலொன்று எமக்கு பிரியாவிடை தந்துவிட்டது. இளமைகாலங்களில் ஒரு தொழிற்சங்கவாதியாக தனது பொதுவாழ்வை ஆரம்பித்த பராமாஸ்ரர் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்சிக்காக தனது 72 வயதின் இறுதி மூச்சுவரை ஓயாது உழைத்தவர். புகலிட இலக்கிய அரசியல் பரப்பில் பராமாஸ்ரர் அவர்களின் பங்கு அளப்பரியது. இலக்கியசந்திப்பின் தொடர்ச்சி, வளர்ச்சி, சாதனை என்று எதை பட்டியலிட்டாலும் இவரது பங்கின்றி அவை சாத்தியமில்லை எனலாம். தமிழ் மக்களின் விடுதலை என்பதை ஒரு விரிந்த, பரந்த, அகன்ற ஒரு பார்வையோடு அணுகியவர் அவர். ஐரோப்பிய மட்டத்தில் சந்திப்பு, கூட்டம் என்று எந்தவொன்றிலும் மலையக தோட்ட தொழிலாளர்கள் பற்றிய ஒரு குரல் ஒலிக்கின்றது என்றால் அங்கே பராமாஸ்ரர் எனும் உருவம்தான் முன்னால் தெரியும். அதேபோன்று முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை தொடர்ச்சியாக கண்டித்து வருபவராக முஸ்லிம்களின் வரலாறு, வாழ்வு, அரசியல் பாரம்பரியம் என்று அத்தனையையும் விரல் நுனி தகவல்களாக கொண்டு திரியும் ஒரு நடமாடும் நூலகமாக அவர் வாழ்ந்திருந்தார். முஸ்லிம்கள், கிழக்கிலங்கை மக்கள், தலித் மக்கள் என்று தமிழ் சமூகத்தின் விரவிகிடக்கும் அகமுரண்பாடுகள் தீர்க்கப்படும் நாள்தான் தமிழ் மக்கள் விடுதலையடையும் நாள் என்று திடமாக கூறி அதை நோக்கியே தனது செயற்பாடுகளை வகுத்து கொண்டவர் அவர். யாழ்மையவாதத்திற்கெதிரான எமது போராட்டத்தின் ஆளுமை மிகு தூண்களிலொன்று சரிந்து விட்டதாகவே அவரது மரணத்தை நாம் உணருகின்றோம்.