பிரித்தானியாவில் 21 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் 2 லட்சம் பேர் பங்கேற்றதால் பெரும் பரபரப்பு

பிரித்தானியாவில் சம்பள உயர்வு கோரி பாடசாலை ஆசிரியர்கள் 21 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் இரண்டு லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதனால், மூன்றில் ஒரு பகுதி பாடசாலைகள் மூடப்பட்டன. பிரிட்டனில், தேசிய ஆசிரியர்கள் சங்கம் உள்ளது. இதில் இரண்டு லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள், சம்பள உயர்வு கேட்டு போராடி வந்தனர்.

இவர்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான சம்பள உயர்வை, பாடசாலை ஆசிரியர்கள் மறுசீராய்வு அமைப்பு நிர்ணயம் செய்தது. இதன்படி 2008ம் ஆண்டுக்கு 2.45 சதவீதமும், 2009 மற்றும் 2010ம் ஆண்டுகளுக்கு 2.3 சதவீதமும் என சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது.இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு காணப்பட்டது. பணவீக்க உயர்வுக்கு ஏற்றவாறு, சம்பள உயர்வு இருக்க வேண்டும் என்பது ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு. ஆனால், இதற்கேற்றவாறு சம்பள உயர்வு அறிவிக்கப்படவில்லை என்பதால், சமீபத்தில், ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில், இரண்டு லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்றனர். லண்டனில் முக்கிய வீதிகள் வழியே, ஊர்வலமாக சென்றனர். இவர்களுக்கு ஆதரவாக, கல்லூரி விரிவுரையாளர்களும், அரசு ஊழியர்களும் வேலையை புறக்கணித்தனர். பிரிட்டனில், 21 ஆண்டுகளுக்கு பின்னர் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.