மியான்மரில் `நர்கீஸ்' புயல் தாக்குதல்; 3.394 பேர் பலி 2.879 பேரை காணவில்லை முக்கிய நகரங்கள் தரைமட்டம்

மியான்மர் நாட்டில் `நர்கீஸ்' புயல் தாக்கியது. இதில் 3.394 பேர் பலியானார்கள். 2.879 பேரை காணவில்லை முக்கிய நகரங்களில் 75 சதவீத கட்டிடங்கள் தரைமட்டமாகின.

190 கி.மீ. வேக புயல்

வங்க கடலில் கடந்த வாரம் `நர்கீஸ்' புயல் உருவானது. அது சென்னை உள்ளிட்ட இந்திய நகரங்களை தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த புயல் திசைமாறி மியான்மர் நாட்டை நோக்கி சென்று விட்டது. திட்டமிட்டபடி மியான்மர் நாட்டை `நர்கீஸ்' புயல் தாக்கியது. மணிக்கு 190 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. தலைநகர் யங்கூன் மற்றும் இர்ரவட்டி டெல்டா பகுதிகளை இந்த புயல் தாக்கியது. இதில் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டது.

3.394 பேர் பலி

இந்த புயல் தாக்குதலில் 3.394 பேர் பலி 2.879 பேரை காணவில்லை என மியான்மர் அரசுக்கு சொந்தமான டெலிவிஷன் தெரிவித்தது. இவர்களில் யங்கூனில் 100 பேரும், இர்ரவட்டி டெல்டாவில் 300 பேரும் பலியானார்கள். இருப்பினும், கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கி உள்ள உடல்களை மீட்கும் பணி இன்னும் முடிவடையவில்லை. இந்தப்பணி முடிவடையும்போது, சாவு எண்ணிக்கை உயரும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.மேலும், உட்புற கிராமங்களில் ஏற்பட்ட சாவு எண்ணிக்கை விவரங்கள், மெல்ல மெல்ல வந்து கொண்டிருக்கின்றன. இதன் காரணமாகவும், சாவு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். முழுமையான சாவு எண்ணிக்கை தெரிய சில நாட்கள் ஆகும் என்று ஐ.நா. குழுவினர் தெரிவித்தனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகி விட்டதாகவும் அரசு டெலிவிஷன் தெரிவித்தது.

தரைமட்டம்

நர்கீஸ் புயலின் தாக்குதலால் இர்ரவட்டி டெல்டா பகுதியில் லபுட்டா, கியாய்க் லட் ஆகிய நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு 75 சதவீத கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி விட்டன. அங்கு சாவு எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. தலைநகர் யங்கூனிலும் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. அங்கு பெரும்பாலான கட்டிடங்களில் கூரை இடிந்து விழுந்தது. இதனால் எங்கு பார்த்தாலும் கூரை இல்லாத கட்டிடங்களாக காட்சி அளிக்கின்றன.

கப்பல்கள் மூழ்கின

யங்கூன் துறைமுகத்தில் 4 கப்பல்கள் நீரில் மூழ்கின. யங்கூன் விமான நிலையத்துக்கு வர வேண்டிய விமானங்கள், மண்டலே விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. யங்கூனில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள், ரத்து செய்யப்பட்டுள்ளன. நகரில் உள்ள எல்லா தெருக்களிலும் மரங்கள் முறிந்து விழுந்தன. மின் கம்பங்கள் சாய்ந்தன. தெருவில் நிறுத்தப்பட்டிருந்த கார்களை, புயல் தலைகுப்புற கவிழ்த்து போட்டது.

மின்வினியோகம் பாதிப்பு

புயலின் தாக்குதலால் யங்கூன் நகரம் முழுவதும் மின்சப்ளையும், குடிநீர் சப்ளையும் துண்டிக்கப்பட்டது. எப்போது மின்சாரம் மீண்டும் வரும் என்று தெரியாது என மின்வாரிய ஊழியர் ஒருவர் தெரிவித்தார். மின்சாரம் இல்லாததால் மெழுகுவர்த்தி விற்பனை அமோகமாக நடந்தது. உணவு பொருட்களின் விலை, இருமடங்காக உயர்ந்து விட்டது. புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வெளிநாட்டு நிவாரண குழுவினர் செல்ல முடியவில்லை.

தனது வாழ்நாளில் இப்படிப்பட்ட சேதத்தை பார்த்தது இல்லை என்று ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர் தெரிவித்தார். அமெரிக்காவை `கத்ரினா' என்ற சூறாவளி தாக்கியதை இச்சம்பவம் நினைவுபடுத்துவதாகவும் அவர் கூறினார்.

தெருக்களில் முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். வீடுகளை இழந்தவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை பிரதமர் தீன்சேன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.மியான்மரை தாக்கிய `நர்கீஸ்' புயல், அடுத்ததாக தாய்லாந்து நோக்கி நகர்ந்து விட்டது.