மியான்மார் நர்கீஸ் புயலின் கோரதாண்டவம் பலியானோரின் எண்ணிக்கை 13 ஆயிரமாக உயர்வு

நர்கீஸ் புயல் தாக்குதலினால் மியான்மர் தெருக்களில் குவியல், குவியலாக பிணங்கள் கிடக்கின்றன.தமிழ்நாட்டை மிரட்டி வந்த நர்கீஸ் புயல்திசைமாறி சென்று மியான்மர் நாட்டை நேற்று முன்தினம் தாக்கியது. இதில் ராட்சத அளவில் கடல் அலைகள் எழுந்து ஊருக்குள் சென்றன. ஏராளமான மரங்கள் விழுந்தும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

இவற்றில் ஏராளமானோர் சிக்கி உயிர் இழந்தனர். தலை நகரம் யாப்கூன் மற்றும் இராவட்டி டெல்டா பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இராவட்டி டெல்டாவில் உள்ள ஒரு தீவு பகுதியே முற்றிலும் நாசமாகி விட்டது. அங்குள்ள பெகெலாய், லாபுட்டா ஆகிய நகரங்கள் முற்றிலும் அழிந்த நிலையில் காணப்படுகின்றன.

இதில் சிக்கி இறந்தவர்கள் உடல்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. இடிந்த கட்டிடங்கள், மரங்களுக்கு அடியில் ஏராளமானோர் பிணமாக கிடக்கின்றனர். தண்ணீரில் அடித்து வரப்பட்ட பிணங்கள் தெருக்களில் குவியல் குவியலாக கிடக்கின்றன.

மியான்மரில் மொத்தம் 5பகுதிகளில் புயல் தாக்கி உள்ளது. இதில் 2 பகுதிகளில் இறந்தவர்கள் பற்றி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. அதில் 3934 பேர் இறந்ததாகவும் 2879 பேர்காணாமல் போனதாகவும் தெரியவந்தது. இன்னும் 3பகுதிகளில் கணக்கெடுப்பு நடக்க வேண்டி உள்ளது. தற்போது உள்ள நிலையில் பலியானோரின் எண்ணிக்கை 13ஆயிரத்தை தாண்டி இருக்கலாம் என்று மியான்மர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இராவட்டி பகுதியில் பல இடங்களில் இன்னும் மீட்பு குழுவினர் நுழைய முடியவில்லை. அங்கு வெள்ள பெருக்கு ஏற்பட்டு இருப்பதுடன் வீதிகள் முழுவதும் மரங்கள் விழுந்து கிடக்கின்றன. அதை தாண்டி மீட்பு குழுவினர் உள்ளே செல்ல முடியவில்லை. இதனால் இறந்தவர்கள் பிணங்கள் மீட்க முடியாமல் அழுகி கிடக்கின்றன.

பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்தாலும் போதிய வசதிகள் இல்லை. எனவே அவர்கள் கோவில்களிலும், சேதம் அடைந்த கட்டிடங்களிலும் தங்கி உள்ளனர்.

மீட்பு பணிகளில் மியான்மர் ராணுவம் ஈடுபட்டு உள்ளது. அவர்களால் இந்த பணிகளை செய்ய முடியாததால் வெளிநாட்டினர் உதவிகளை கேட்டுள்ளனர். மியான்மர் நாட்டில் பக்கத்து நாடான தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் உணவு பொருட்கள் அனுப்ப பட்டுள்ளன. இந்தியா கப்பல் மூலம் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.

செஞ்சிலுவை சங்க குழுவும் மியான்மருக்கு சென்று மீட்புபணி மற்றும் நிவாரண உதவிகளை செய்து வருகிறது.

மியான்மரில் ராணுவ ஆட்சி நடப்பதால் அமெரிக்கா சில பொருளாதார தடைகள் விதித்து இருந்தது. இப்போது புயல் வீசி அந்த நாடு கடுமையாக பாதிக்கப்பட்ட இருந்தன. இந்த தடைகளை அகற்றி தேவையான அனைத்து நிவாரண உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக அறிவித்து உள்ளது. மீட்பு பணிகளில் ஈடுபட்ட அமெரிக்க குழு ஒன்றை தயாராக வைத்திருப்பதாகவும் அறிவித்துள்ளது. மியான்மர் அனுமதித்தால் உடனடியாக மீட்பு குழுவினர் அங்கு செல்வார்கள் என்று கூறியுள்ளனர். மியான்மரில் உடனடி உதவிக்காக அந்த நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் ரூ.1கோடி வழங்கி உள்ளது.