
கடந்த 2007 முதல் ஆண்டுதோறும் விஜய் டி.வி. சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கான விருதுகளை வழங்கி வருகிறது. பொதுமக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருது வழங்கும் விழா சென்னையில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. பெருவாரியான ரசிகர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் நடிகர் ரஜினிகாந்த் "அபிமான ஹீரோ' விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற "குசேலன்' படப்பிடிப்பில் இருந்த ரஜினிகாந்திடம் விஜய் டி.வி.யின் நிர்வாகிகள் நேரில் சென்று விருதை வழங்கினர். விருது குறித்து ரஜினிகாந்த் கூறியதாவது:
விஜய் டி.வி. விருதுகள் பொதுமக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் வழங்கப்படுவதில் மிகவும் மகிழ்ச்சி. என் மீது அன்பு வைத்து என்னை தங்கள் அபிமான ஹீரோவாகத் தேர்ந்தெடுத்த தமிழக மக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். "குசேலன்' படப்பிடிப்பில் இருப்பதால் விழாவுக்கு என்னால் வர இயலவில்லை. விருது பெற்ற என்னுடைய சக கலைஞர்களுக்கு வாழ்த்துகள் என்று ரஜினி தெரிவித்துள்ளார்.
"ஒன்பது ரூபாய் நோட்டு' படத்தில் நடித்த சத்யராஜுக்கு சிறந்த நடிகர் விருதும், "பருத்தி வீரன்' படத்துக்காக ப்ரியாமணிக்கு சிறந்த நடிகை விருதும் வழங்கப்பட்டது. இயக்குநர் மணிரத்னத்துக்கு "செவாலியே சிவாஜிகணேசன்' விருது, "பொல்லாதவன்' படத்துக்காக வெற்றிமாறனுக்கு சிறந்த இயக்குநர் விருதும் வழங்கப்பட்டன.
ஏ.ஆர்.ரஹ்மான் (சிறந்த இசையமைப்பாளர்), சூர்யா (ரசிகர்களின் நாயகன்), விஜய் (ஜனரஞ்சக நாயகன்), வடிவேலு (நகைச்சுவை நாயகன்), நயன்தாரா (பிடித்த நடிகை), கார்த்தி (சிறந்த புதுமுக நடிகர்) உள்ளிட்ட பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த விருது வழங்கும் விழா நிகழ்ச்சிகளின் தொகுப்பு, இந்த மாத இறுதியில் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது. செவாலியே சிவாஜிகணேசன்' விருது பெறும் மணிரத்னத்துடன் நயன்தாரா, விஜய், கே.பாலசந்தர், பிரபு