இலங்கை பிரச்னைக்கு இரு கோணங்கள்: இந்திக்கு ஆதரவு : 'காலங்கள் மாறும்' என்று டில்லியில் விஜயகாந்த் பரபரப்பு

கூட்டணி குறித்து தற்போது பேச டில்லி வரவில்லை என்றாலும், காலங்கள் மாறும் என்று தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறினார். இலங்கை விவகாரத்தில் தமிழகம் சார்ந்த பார்வை என்றும் இந்திய அளவிலான பார்வை என்று இரண்டு கோணங்கள் உள்ளன என்று தெரிவித்தார். டில்லியில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று நிருபர்களிடம் தன் கட்சியின் அணுகுமுறை குறித்து பேட்டியளித்தார் .

அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தின் நலன்களில் எந்த கட்சி அக்கறை காட்டுகிறதோ அந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்கத் தயார். கூட்டணி வைக்கும்போது ஒவ்வொருவருக்கும் இவ்வளவு இடங்கள் என்று சீட்டுகளை பங்கிட்டு கையெழுத்திட்டு தருவதைப் போல, இன்னன்ன பிரச்னைகளை தீர்க்க உதவியாக இருப்பேன் என்று, ஒரு செயல்திட்ட அடிப்படையில் கையெழுத்திட்டு தர ஏன் முடியாது?

இலங்கை தமிழர் பிரச்னையைப் பொறுத்தவரை அங்கு மனிதாபிமான அடிப்படையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். நாகாலாந்தில் இயங்கும் தடை செய்யப் பட்டுள்ள அமைப்புகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது. அப்படியிருக்கும் போது இலங்கையில் தற்போது நடக்கும் இனப்பிரச்னைக்கு தீர்வு காண புலிகள் அமைப்புடன் ஏன் பேச்சுவார்த்தை நடத்த கூடாது? இலங்கை தமிழர் பிரச்னைக்கு இரண்டு கோணங்கள் உள்ளன. ஒன்று தமிழகம் சார்ந்த பார்வை. அடுத்தது இந்திய அளவிலான பார்வை. இந்தியா ஆயுதம் வழங்கவில்லை என்றால், பாகிஸ்தானும் சீனாவும் இலங்கை ராணுவத்திற்கு ஆயுதங்கள் வழங்க தயாராக உள்ளன. எனவே இந்தியா ஆயுதங்கள் வழங்குவதை எப்படி குறை கூற முடியும்? தே.மு.தி.க., வைப் பொறுத்தவரை "அன்னை மொழியை காப்போம் அனைத்து மொழிகளையும் கற்போம்' என்பதே கொள்கை. எனவே இந்திமொழியை கற்பதை தே.மு.தி.க., எதிர்க்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.