
விவசாயிகள் அதிகமாக வாழும் படுவான்கரைப் பகுதிகளில் ரி.எம்.வி.பியின் முக்கிய தலைவர்கள் களமிறங்கி பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பிரபாகரன் தலைமையிலான புலிகளின் பாரிய மீனகம் தளம் அமைந்திருந்த பிரதேசத்தினை அண்டிய பகுதிகளில் மேற்படி பிரச்சார நடவடிக்கைகள் இடம்பெற்றன. இலுப்படிச்சேனை, மகிழவெட்டுவான், கொடுவாமடு, போன்ற இடங்களில் ஒரே நாளில் 06 பெரும் கூட்டங்கள் இடம்பெற்றன. கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற இத்தொடர் கூட்டங்களில் ரீ.எம..வி.பியின் பிரதித் தலைவரும் முதன்மை வேட்பாளருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்( பிள்ளையான்) அவர்கள் நேரடியாகவே பங்குகொண்டு வாக்காளர்களிடம் உரையாடினார். கடந்த போராட்ட காலங்களில் இப்பிரதேச மக்களிடம் நன்கு அறிமுகமாயிருந்த போராளியான சந்திரகாந்தன் அவர்கள் இன்று கிழக்கு மாகாணத்திற்கான முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கியிருப்பதனையிட்டு மக்கள் மகிழ்ச்சிபொங்க ஆரவாரம்செய்து அவரை வரவேற்றனர்.
அங்கு உரையாற்றிய சந்திரகாந்தன் அவர்கள் கூறும்போது கிழக்கு மாகாண மக்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளையே ஆளும் கட்சியாக தேர்வு செய்வார்கள் என்பதை இங்கு கூடியிருக்கும் மக்கள் வெள்ளம் எடுத்துக்காட்டுகின்றதென தெரிவித்தார். தாம் முதலமைச்சராகும்பட்சத்தில் கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்படப்போகின்ற முதலாவது தீர்மானமாவது கிழக்கிலங்கை சிறார்களின் ஆரம்பக் கல்வியை நூறு வீதம் உறுதி செய்வதற்கான கட்டாய ஆரம்பக் கல்வி என்னும் திட்டமேயாகும் எனத் தெரிவித்தார். தனது ஆட்சிக்காலம் முடிவடைந்து செல்கின்ற நான்காவது ஆண்டுகால இறுதியில் இந்தியாவின் கேரள மானிலத்திற்கு ஒப்ப கிழக்கிலங்கை மக்கள் நூறுவீத கல்வியறிவினை நோக்கிய பயணத்தில் வெற்றியீட்டும் நிலையை உருவாக்கவேண்டுமென்பதே தனது கனவாகுமென குறிப்பிட்டார். மேற்படி கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளாகளாகிய பிரதீப் மாஸ்ரர், பிரேம் குமார். மற்றும் பிரசாந்தன் ஆகியோரும் உரையாற்றினர்.