கிழக்கின் பிரஜைகள் சிந்திக்கவேண்டிய கடைசித் தருணங்கள்.

நாளை இடம்பெற இருக்கின்ற (10-05-08)கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலானது கிழக்கு மாகாண மக்களின் தலைவிதியினை மட்டுமல்ல எதிர்கால இலங்கை அரசியலின் தலைவிதியினையே தீர்மானிக்கப்போகின்ற ஒரு முக்கிய வரலாற்றுக் கட்டமாகும். காரணம் இன ஐக்கியம் சீர்குலைக்கப்பட்டு இரத்த ஆறு ஓடிய கிழக்கு மாகாண மண்ணில் இன்று அமைதி திரும்பியுள்ளது. தமிழ் தேசியவாதம் என்கின்ற அரசியல்போக்கு உருவான காலத்திலிருந்துதான் கிழக்கு மாகாண மக்களிடையே தமிழ்—முஸ்லிம் கலவரங்கள் முதன் முதலாக ஆரம்பித்தன. சுமார் 20 வருடகாலம் தொடர்ந்த இந்த முரண்பாடுகள் கடந்த 2004 ம் ஆண்டு ரீ.எம்.வி.பி உருவானதிலிருந்து பாரிய மாற்றம் கண்டுள்ளது. முஸ்லிம் மக்கள் முஸ்லிம் கட்சிகளுக்கு மட்டுமே வாக்களித்த காலமும், தமிழ் மக்கள் தமிழ் இயக்கங்களுக்கு மட்டுமே வாக்களித்த காலமும் மாறி தமிழ், முஸ்லிம் மற்றம் சிங்கள வேட்பாளர்கள் ஒரே சின்னத்தில் போட்டியிடுகின்ற சாதகமான சூழ்நிலை இன்று கிழக்கில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையினை இந்த ஒற்றமையினை பரந்துபட்ட மக்களைநோக்கி நாம் வழர்த்தெடுக்கப்போகின்றோமா அல்லது மீண்டும் தமிழ், முஸ்லிம் அணிகளாக பிரிவுபட்டு அடிபடப்போகின்றோமா என்பதனை தீர்மானிக்கும் காலம் இதுவாகும. இன்றைய கிழக்கில் புலிப்பாஸிஸம் தோற்கடிக்கப்பட்டு யுத்த வெறியர்கள் புல்மோட்டை எல்லைக்கப்பால் துரத்தப்பட்டிருக்கின்றார்கள். எமது குழந்தைகள் நிம்மதியாக பாடசாலைக்குச் சென்றுவரும் சூழல் ஏற்பட்டுள்ளது. 35 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான இத்தேர்தலில் 1.300ற்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டிபோடுமளவிற்கு கிழக்கில் ஜனநாயகம் வழர்ச்சிகண்டுள்ளது. இந்நிலையில் நாம் எதிர்கொண்டுள்ள கேள்விகள் இதுதான். இன்றைய அமைதிநிலைமை தொடர்ந்த பேணப்படவேண்டுமா இல்லை மீண்டும் யுத்தத்தினை வரவேற்கப்போகின்றோமா? இன்றைய அமைதிநிலையினை ஏற்படுத்தியவர்கள் யார் என்பதனை நாம் சரியாக அடையாளங்கண்டுகொள்ள வேண்டும்.

எமது குழந்தைகளின் கைகளில் ஆயுதங்களை மீண்டும் திணிக்கப்போகின்றோமா? அவர்கள் மீண்டும் காடுகளுக்குள் செல்வது எமக்கு சம்மதமா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய கடைசிதருணங்கள் இவை. ஆயிரக்கணக்கான கிழக்கிலங்கை இளைஞர்களின் உயிர்களின் அர்ப்பணிப்பிலேயே இன்றைய அமைதிச் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.. இதுவரை காலமும் கொழும்பில் தஞ்சமடைந்து தமது உயிர்களை காப்பாற்றிக் கொண்டிருந்த கையாலாகாத தலைமைகள் எல்லாம் இன்று மட்டுநகர் வீதிகளில் வலம் வருவதற்கும் போலி ஒற்றுமைபற்றி பேசுவதற்கும் வாய்ப்பளித்தது கிழக்கிலங்கை வீரர்களின் துணிச்சலான அர்ப்பணிப்புக்கள் என்பதனை யாரும் மறந்துவிடமுடியாது. கறையான்கள் புற்றெடுக்க கரு நாகம் குடிகொள்வது போல ஜனநாயகத்தின் பேரில் இந்தப் பாழ்பட்டுப்போன இயக்கங்கள் இன்று எமது மண்ணில கடைவிரித்திருக்கின்றது.. திம்பு பேச்சவார்த்தைகளுக்கு ஐந்த இயக்கங்களாக பிளவுபட்டுச் சென்று ஆளுக்கொரு மூலையில் குந்திப் பேசியவர்கள் இவர்கள். எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் இவர்களை ஒற்றுமையாக்க எடுக்காத முயற்சிகள் இல்லை, வட்டமேசை மகாநாடுகளிலும், சர்வகட்சிக் கூட்டங்களிலும். தமிழ் மக்களின் பெயரில் ஒன்றுபடும் அதிசயம் எப்போதும் உருவாகவில்லை. கடந்த வருடம் .இந்தியாவிற்கும் தென் ஆபிரிக்காவிற்கும் ஒன்றாக பயணித்துவந்த இவர்கள் நாலு வரிப் பத்திரிகை அறிக்கை ஒன்றினை விடுவதற்கக்கூட ஒற்றுமையை என்னவென்று அறியாதவர்கள் இவர்கள். பிரபாகரன் இந்த இயக்கங்களையெல்லாம் சுட்டுத்தின்று ஏப்பம்விட்ட பொழுதகளில்கூட ஒற்றுமைபற்றி இவர்கள் கனவு காணவில்லை.

யாழ்ப்பாண அரசியல்வாதிகளின் வரலாற்றிலோ அகராதியிலோ தெரியாத இந்த ஒற்றுமை இன்று கிழக்கு மண்ணில் எற்பட்டுள்ளது. இந்த அதிசயத்தின் பின்னணி என்ன? கிழக்கில் உருவாகி வழர்ந்துவரும் அரசியலின் எழுச்சியினை தடுத்து நிறுத்துகின்ற சதியே இது! இந்த சதியினை கிழக்குமாகாண மக்கள் இனங்கண்டுகொள்ள வேண்டும். இந்த போலித் தலைமைகளையும் காலாவதியாகிப்போன இயக்கங்களையும் முற்றாக நிராகரிக்க வேண்டும். இன ஐக்கியத்தினைப் பேணவும் கிழக்கு மண்ணைக் கட்டியெழுப்பவும் கிடைத்திருக்கின்ற இறுதிச் சந்தாப்பம் இதுவாகும். தமிழ், முஸ்லிம்: வேறுபாடுகளைக் கடந்து ஐக்கிய மக்கள் சதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரிப்பதொன்றே நம்முன் உள்ள சரியான தீர்வாகும். நாளை வருகின்ற தேர்தலில் வெற்றயின் சின்னம் வெற்றிலையாக இருக்கட்டும்.

புலிப்பாஸிஸத்தினை நேருக்கு நேர் சந்தித்து தோற்கடித்த கிழக்கு மக்கள் தமது வீரத்தை மட்டுமல்ல விவேகத்தையும் காண்பிக்கவேண்டிய தருணம் இதவாகும்.