

நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கூட்டணி அமைத்த புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழர் விடுதலைக் கூட்டணி போன்றவை போட்டியிட்டிருந்தன. தமிழர் ஒற்றுமையின்பேரிலும் வடக்கு கிழக்கு இணைப்புக் கோரிக்கையை வலியுறுத்தும் நோக்கிலும் இவர்களின் பிரச்சாரங்கள் அமைந்திருந்தது. ஆனால் இந்தப் பிரச்சாரங்களின் பின்னணியில் கிழக்கு மாகாண மக்களின் அரசியல் எழுச்சியினை தடுத்து நிறுத்தும் சதி ரீ.எம்.வி.பி.யினரின் அரசியல் பிரச்சார மேடைகளில் அம்பலமாக்கப்பட்டதன் காரணமாக இவ்வியக்கங்கள் கிழக்கில் மண் கெளவ்வியுள்ளன. இயக்க மோதல்கள் அதிகரித்த கடந்த காலங்களிலும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வுகளை ஒருமித்து வைக்கவேண்டிய காலங்களிலும் ஏற்படாத இந்த ஒற்றுமை இப்போது எற்பட்டிருந்தமையை எண்ணி கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் பாரிய சந்தேகங்கள் எழுந்திருந்தது. இதனடிப்படையில் மேற்படி இயக்கங்களை யாழ் மேலாதிக்கத்தின் அரசியல் வடிவங்களாகவே கிழக்கு மாகாண மக்கள் அவதானித்தனர். அதுமட்டுமன்றி வடக்கு கிழக்கு இணைப்பு என்கின்ற காலாவதியாகிப்போன சிந்தனைகளை இன்றைய இளம் சமுதாயம் அர்த்தமற்ற ஒன்றாகவும், அவசியமற்ற ஒன்றாகவும் பார்க்கத் தொடங்கியிருக்கின்றது. எனவேதான் மிதவாத, தீவிரவாத தன்மையினைக் கொண்ட அனைத்து யாழ்ப்பாண அமைப்புக்களும் இன்று கிழக்கில் தோல்வியடைந்திருக்:கின்றன.
982.721 வாக்காளர்களைக்கொண்ட கிழக்கு மாகாணத்தில் காலாவதியாகிப்போன இந்த மூன்று அமைப்புக்களும் ஒன்றிணைந்து பெற்ற வாக்குகள் 7.714 மட்டுமே என்பது இக்கட்சிகளின் அரசியல் எதிர்காலம் கிழக்கு மண்ணில் புதைகுழிக்குள் அனுப்பப்பட்டு விட்டதென்பதனையே எடுத்துக் காட்டுகின்றது. சராசரி 1 சதவீத மக்களின் ஆதரவினைக்கூட பெறமுடியாத இம்முக்கூட்டு கூட்டணியினர் இனிமேல் கிழக்கு மாகாணத்தில் போட்டியிடுவதற்கு மட்டுமல்ல கிழக்கில் காலடி பதிப்பதற்கு மட்டுமல்ல கிழக்கு மாகாணம் பற்றிப் பேசுவதற்கும் எவ்வித அருகதையும் அற்றவர்களாகும். என்பதனையே இத்தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.. இதேபோன்றுதான் ஈ.பி.டீ.பியினர் பெற்ற வாக்குகள் 5.418 மட்டுமேயாகும். இவைகூட என்றும் பிரியாத வடகிழக்கு கொள்கைக்காக வழங்கப்பட்டவையல்ல. அப்படியானாலும்கூட கிழக்கு மாகாண ஒட்டுமொத்த வாக்காளர்களின் தொகையில் இதுவும் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவானதே.. மாறாக ஈ.பி.டி.பிக்கு அளிக்கப்பட்ட இந்த வாக்குகள் கடந்த 10 ஆண்டுகளுக்குமேலாக அமைச்சராக இருக்கும் திரு டக்ளஸ் தேவானந்தா அவர்களுடைய அற்ப சொற்ப பணிகளுக்காக நன்றியுள்ள கிழக்கு மக்களால் வழங்கப்பட்ட கைமாறு என்பதே உண்மை. இதேபோன்றுதான் இல்லாமல்போய் புலிகளின் தொங்கு தசைகளாக சாகாவரம்பெற்று மீண்டும் உருவாகிய ஈரோஸ் என்னும் கூட்டத்தினருக்கும். மாகாண அளவில் கிடைத்த மொத்த வாக்குகள் 2.275 மட்டுமே ஆகும்.
இவர்களுக்கெல்லாம் நாம் சொல்லக்கூடியது ஒன்று மட்டும்தான் தயவு செய்து இந்த அமைப்புக்களை ஏதாவது என்.ஜீ.ஓ.க்களாக பதிவு செய்துகொண்டு எங்கேயாவது ஒரு அனாதை ஆச்சிரமங்களை நடாத்த முன்வந்தால் போகின்ற வழிக்கு கோடி புண்ணியம் கிடைக்கும் என்பதனை நாம் தெரிவிக்க விரும்புகின்றோம்.