அமெரிக்க அதிபர் ஜோர்ச் புஷ் அவர்களின் மகள் திருமணம் : 300 பேர் மட்டுமே பங்கேற்பு

அமெரிக்க அதிபர் ஜோர்ச் புஷ்ஷின் மகள், ஜென்னாவின் திருமணம், டெக்சாஸ் மாகாணத்தில் நடந்தது. அமெரிக்க அதிபர் புஷ்ஷின் மகள் ஜென்னா. இவருக்கும், வெர்ஜினியா மாகாணத்தை சேர்ந்த ஹென்றி ஹாகர் என்பவருக்கும், கடந்தாண்டு காதல் ஏற்பட்டது. இவர்களது திருமணத்திற்கு, இரு வீட்டாரும் சம்மதித்தனர். இதையடுத்து, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள புஷ்ஷின் பண்ணை வீட்டில், ஜென்னாவிற்கும், ஹாகருக்கும், நேற்று அதிகாலை திருமணம் நடந்தது.

அமெரிக்க முன்னாள் அதிபரும், தற்போதைய அதிபரின் தந்தையுமான ஜார்ஷ் புஷ், அவரது மனைவி பர்பரா மற்றும் அதிபர் மனைவி லாரா உள்ளிட்டோர், திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, பயங்கரவாதம் தொடர்பான கவலைகளை எல்லாம், ஒதுக்கி வைத்துவிட்டு, அதிபர் புஷ், திருமண நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.

இதுபற்றி அவர் கூறுகையில்,"இன்று எனக்கு மிகவும் சந்தோஷமான நாள். எனக்கு மட்டுமல்ல, எனது குடும்பத்திற்கும் இதுவே மகிழ்ச்சியான நேரம். ஜென்னாவுடன் சேர்ந்து, நானும் எனது மனைவியும், இந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். சர்வதேச அன்னையர் தினம், கொண்டாடப்படும் வேளையில், ஜென்னாவிற்கு திருமணம் நடந்துள்ளதால், எனது மனைவி லாரா மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளார்'என்றார். இந்த திருமணம் மற்றும் அதைத் தொடர்ந்த விருந்தில் 350 க்கும் குறைவானவர்களே கலந்து கொண்டனர்.