தாயையும் சேயையும் பிரித்து கூத்து பாக்கும் தாத்தா சூடாக அருந்தாது சுவையாக அருந்துவதால் சுகமான வாழ்வை மக்கள் வாழமுடியும் அல்லவா??

இப்படிக் கூறுகின்றார் ஈர அனல் ஆசிரியரான முகமூடியணிந்த பாலா மாஸ்ரர்.(சுவிஸ்)
கிழக்கு மாகாண மக்களின் அரசியல் எழுச்சியினை தடுத்து நிறுத்தும் சதி, ரீ.எம்.வி.பி.யினரின் அரசியல் பிரச்சார மேடைகளில் அம்பலமாக்கப்பட்டதன் காரணமாக புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற அமைப்புகளை முட்டுக்கட்டையாக நிறுத்தியதன் பதிலடி தான் பிள்ளையானுக்கு கிடைக்க இருக்கும் முதல் அமைச்சர் பதவி கேள்விக் குறியாகி விட்டது என்பதை பகிரங்கமாகவே தெரிவிக்க விரும்புகின்றோம்.

பதில்.

நனைகின்ற ஆடுகளைப் பார்த்து அழுகின்ற ஓநாய்களே உங்களுக்கெல்லாம் கிழக்கு மாகாணமக்கள் பற்றிய அக்கறை திடீரென உருவாகியமைக்கான அடிப்படைக் காரணங்கள் என்ன? பொன் முட்டை இடும் வாத்தினை யாழ் மேலாதிக்க சிந்தனைகொண்ட சிற்பிகள் பறிகொடுத்துவிட்டார்கள் என்னும் பரிதவிப்பா? நீங்களெல்லாம் தாய்நாட்டைவிட்டு சொகுசு வாழ்க்கையை தேடி சுவிஸ் நாட்டிற்கு ஒடிவந்தவர்கள் உங்களின் வாழ்க்கை வரலாற்றில் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தில் நீங்கள் ஆற்றிய பங்களிப்பு என்ன? அதனை முதலில் தெரியப்படுத்துங்கள். மேற்கு நாட்டவரின் வரிப்பணத்தில் தினசரி வாழ்க்கையை ஓட்டும் நீங்கள் பொழுது போக்கிற்காக உங்களது பெயரைக்கூட வெளியிட முதுகெலும்பற்ற நிலையில் (வெறிக்குட்டி பாலாவிற்கு பதிலாக) முகமூடி அணிந்த பாலாவாக (ஈர அனல்) என்னும் பெயரில் சுவிஸ் நாட்டில் ஒழிந்துகொண்டு எமக்கு ஆலோசனை கூறுவதற்கும், என்போன்றவர்களை விமர்சனம் செய்வதற்கும் உமக்கு இருக்கின்ற தகைமை என்ன?

நாங்கள் எதனை எழுதுவதாக இருந்தாலும் எமது பெயரினை அச்சமின்றி வெளியிடுபவர்கள். காரணம் நாம் எமது மண்ணிற்காகவும், மக்களுக்காகவும் குரல் கொடுத்து தாயகத்தில் பல சாதனைகளை நிலைநாட்டியவர்கள் தொடர்ந்தும் தஞ்சம்புகுந்த நாட்டிலும் அதனை முன்னெடுப்பவர்கள். உங்களைப் போன்று அடுத்தவர்களின் மூலவழங்களை சுரண்டுவதற்காக தேசியம் பேசும் தேச விரோதிகள் அல்ல!

பாலா
அரசியல் சாணக்கியம் தெரியாது கடந்த பலவருடங்களாக தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து குப்பையைக் கொட்டிய 'தாத்தா தீடீர்" என்று பல்டியடித்து இன்று ரீ.எம்.வி.பி.யினருக்கு குடை பிடிப்பதால் அவர்கள் செய்யும் தவறுகளும் பிழையான அரசியல் சதிகளும் அவர்களுக்கே வெட்கக்கேடு என்பதை ஒருபொழுதும் மறந்துவிடக் கூடாது. கடந்த காலத்தில் கிழக்கு மாகாணத்தில் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழர் விடுதலைக் கூட்டணி சேர்ந்த கூட்டமைப்பு வெற்றியிட்டீயதை மறந்து விட்டார்;களா? இம்முறை வந்திருந்தால் யாருக்கு இலாபம் கிடைத் திருக்கும்? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்படி சிந்தனையே இல்லாத ஞானசூனியங் களால் தான் தமிழர்கள் அழிந்து கொண்டு போகின்றார்கள். தமிழர் ஒற்றுமையின் பேரை மாசுபடுத்தி வென்றதில் எந்தவொரு இலாபமும் கிடைக்காது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

பதில்
தமிழர் விடதலைக் கூட்டணியிலிருந்து நாங்கள் குப்பையைக் கொட்டியதாக மேலே குறிப்பிட்டுள்ள பாலா கடந்த காலத்தில் கிழக்கு மாகாணத்தில் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழர் விடுதலைக் கூட்டணி சேர்ந்த கூட்டமைப்பு வெற்றியிட்டடியதை மறந்து விட்டார்;களா? என எம்மைப் பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார். அவ்வாறாயின் இலங்கையில் இரு தமிழர் விடுதலைக் கூட்டணி இருந்ததாக பாலா குறிப்பிட்டுள்ளது அவரின் அரசியல் வங்குறோத்திற்கு சான்று பகர்கின்றது. அடுத்து புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழர் விடுதலைக் கூட்டணி சேர்ந்த கூட்டமைப்பு வெற்றியீட்டடியதை மறந்து விட்டார்களா என வினாவிடுத்துள்ளார். அவர்கள் வெற்றியீட்டியது எங்கே, எப்போது என்பதனை அவர் வாசகர்களுக்கு தெரிவிப்பது நன்மை பயக்குமென நான் கருதுகின்றேன்.

பாலா

அவர்களோடு சேர்ந்து வடக்கு கிழக்கு இணைப்பு கோரிக்கையை வலியுறுத்தும் நோக்கிலும் ரீ.எம்.வி.பி.யினரின் பிரச்சாரங்கள் அமைந்திருந்தால் இன்னும் பலம் பொருந்திய வெற்றியை பெற்று முதல் அமைச்சர் என்ற பதவியையும் தட்டிச் சென்று இருக்க முடியும். ஆனால் இந்தப் பிரச்சாரங்களின் பின்னணியில் கிழக்கில் பயங்கரவாதியாகவே இருக்க முடியும் என்பதையும் எப்பொழுது ஆயுதங்களை களைவார்கள் என்ற பதட்டத்தோடு பகலில் முஸ்லிம் சகோதரர் முதல் அமைச்சராக இருப்பார். இதேசமயம் பிள்ளையான் இரவில் முதல் அமைச்சராக இருக்க வேண்டிய காலகட்டமாகி விட்டது என்பதை இனியாவது தாத்தா சிந்தித்து பார்க்க வேண்டும்.

பதில்.

எமக்கும் எமது மக்களுக்கும் இன்று தேவையானதெல்லாம் முதலில் பாஸிஸப் புலிகளை கிழக்கு மாகாணத்திலிருந்து விரட்டியடிப்பதும் அதன்மூலம் எமது வாரிசுகளை பாதுகாத்து அவர்களுக்கு வழமான எதிர்காலமொன்றினை ஏற்படுத்துவதுமாகும். அடுத்ததாக ஜனநாயக வாதிகளாக தம்மை வெளிக்காட்டிக்கொண்டு நடமாடும் முகமூடி அணிந்த புலிகளான புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற வடமாகாண மேலாதிக்க அரசியல் தலைமைகளின் கிழக்குமீதான ஆக்கிரமிப்பினை தடுத்து நிறுத்துவதாகும். கடந்த ஜனவரி மாதம் 4 ந் திகதி தமிழகத்தில் மேற்படி கூட்டணியினர் நடாத்திய கருத்தரங்கு ஒன்றில் (ஆனந்தசங்கரி, சித்தாத்தன்,சுகு) ஆகியோர் தமிழகத்தில் ஒரு யாழ்ப்பாணம் உருவாகாது தடுப்பதற்காகவே தாங்கள் இங்கு வந்திருப்பதாக பகிரங்கமாக கூறியிருந்தார்கள். அப்படியாயின் அதன் அர்த்தம் என்ன என்பதனை பாலா போன்றோரே வாசகர்களுக்கு தெரிவிப்பது ஆரோக்கியமானதாக அமையுமென நாம் எதிர்பார்க்கின்றோம்.

பாலா

இயக்க மோதல்கள் என்பதை புலிகளைத் தவிர வேறுயாரும் எப்பொழுதும் தொடக்கியது கிடையாது 1986ம் ஆண்டு தொடக்கம் புலிகளும் அவர்களிடம் இருந்து பிச்சுக் கொண்டு வந்து அரசியல் இலாபத்திற்காக சுரண்டிப் பிழைப்பை நடத்தும் ரீ.எம்.வி.பி.யினர் தான் என்பதை மக்கள் மறக்க மாட்டார்கள் என்பதற்கு இது நல்லதொரு உதாரணம். கடந்த காலங்களிலும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வுகளை ஒருமித்து வைக்க வேண்டிய காலங்களிலும் இன்று கடத்தல் கொள்ளை போன்றவற்றை மக்கள் மத்தியில் ஏற்படுத்த மக்களை புலிவாயில் இருந்து காப்பாற்றி சிங்கக் குகையில் தள்ளிய கதையாகி விட்டது. இந்த ஒற்றுமை என்ற எண்ணத்தில் ஏற்பட்ட பிரிவா? ரீ.எம்.வி.பி.யினரின் பிரிவு என்பதை ஒரு சிறுதுளியாவது சிந்தித்து தாத்தா பார்க்கவில்லை என்பது எமக்கு மிகுந்த கவலை.

பதில்

எண்ணிக்கையில் (கொலை, கொள்ளை, கப்பம் அறவிடுதல்) மட்டும்தான் பாஸிஸப் புலி முன்னிலை பெற்றுள்ளதே தவிர பாலா குறிப்பிடும் ஏனையோரின் கரங்களும் இரத்தக்கறை படிந்தவை என்பதனையும் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்கள் என்னும் இனவேறுபாடுகளுக்கு அப்பால் பாஸிஸப் புலிகளைப்போன்று இவர்களாலும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வழவு, எப்போது, எங்கே என்னும் புள்ளி விபரங்களையும் எம்மால் வெளியிடமுடியும்.

பாலா

டென்மார்க்கில் இன்னும் குளிர்காலமாக இருப்பதால் தாத்தா இத்தகைய கட்டுரைகளை எழுதமுன் ஏதாவது சூடாக்கி குடித்து அதன் பின் இத்தகைய கட்;டுரைகளை சிந்தித்து எழுதுவதால் மக்களுக்கு நம்பிக்கையாகவும் நன்மையாகவும் இருக்கும். அதுமட்டுமன்றி வடக்கு கிழக்கு இணைப்பு என்கின்றது தாய்பிள்ளையின் உறவு என்பதை நாம் எப்பொழுதும் ஏற்று அதற்கு ஏற்ற மாதிரியான நடவடிக்கைகளை அரசியல் அமைப்புக்களை நகர்த்த வேண்டும்.

பதில்

930 சதுர கிலோமீற்றர் பரப்பளவினைக் கொண்ட யாழ் குடாநாட்டில் வாழ்ந்த மக்களில் 60.% மானவர்கள் தமது தாய்மண்ணைவிட்டு வெளியேறி மேற்குலக நாடுகளில் நிரந்தரமாக குடியேறிவிட்டார்கள். அதனால் குடாநாட்டின் 16.%மான நிலப்பரப்பு பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டு 42.000 பாதுபாப்புப் படையினர் அங்கு நிலைகொண்டுள்ளனர். உங்களைப்போன்றவர்கள் மக்கள்மீது அக்கறை கொண்டவர்களாயின் அம்மக்களுக்கான தீர்வினை எட்டுவதற்கு முதலில் முயலுங்கள். அதனை விடுத்து கிழக்கினை ஆக்கிரமிப்பதற்கான முயற்சியில் நீங்கள் அக்கறை செலுத்துவதன் மர்மமென்ன? இதுவே நீங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்பதனை அச்சமின்றி வெளிக்காட்டுகின்றது.

பாலா

இன்றைய காலத்தின் ஒரு சில மாசுபடிந்த தன்மையால் ஏற்பட்ட பிரிவை ஊதி ஊதி பெரிதாக்குவதால் எதிர்காலத்தில் இளம் சமுதாயம் தமது பாராம்பரியத்தை இழந்து போகும் என்பதை எடுத்துக் காட்ட விரும்புகின்றோம். இலங்கைக்கு வடக்கும் கிழக்கும் பாரம்பரியத்தின் பாலம்! அர்த்தமற்ற வாதத்தால் பிரிக்காது எப்போதும் ஒன்றாக இருந்தால் தான் பெருமையை தேடித்தரும். "கரும்பு கட்டோடு இருந்தால் தான் எறும்பு தேடிவரும்" என்ற பழைய மொழியை அறியாத ஒரு சில இணையதளங்கள் எள்ளி நகைப்பதில் எந்த பிரயோசனமும் கிடையாது. என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்த விரும்புகின்றேன்.

பதில்

பாரம்பரியம் பேசும் உங்களைப்போன்ற பிற்போக்குச் சக்திகள் முதலில் தாயகத்திற்கு சென்று அங்கு தமிழர்களின் எண்ணிக்கையினை அதிகரியுங்கள். அதன்பின்னர் பாலத்தை அமையுங்கள். இறுதியாக ஒரு விடயத்தினை மட்டும் உங்களைப்போன்ற பிற்போக்குச் சக்திகளிடம் கேட்க விரும்புகின்றேன். உங்களில் மனிதநேயம் உள்ளவர்கள் யாரேனும் இருப்பின் கடந்த 25 வருடகாலமாக சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்துக்கொண்டிரக்கும் கிழக்கு மாகாண மக்களுக்காக நீங்கள் ஆற்றிய பணி என்ன? வழங்கிய பொருளாதார உதவிகள் என்ன? அதனை பகிரங்கமாக பெயர் முகவரியுடனும் தொகையுடனும் வெளியிடுங்கள். அல்லது முதலைக் கண்ணீர் வடிப்பதனை நிறுத்தி விடுங்கள். நன்றியுடன் குமாரதுரை தாத்தா