

நேற்றைய தினம் காத்தான்குடி நகார் பிரதேசத்தில்வைத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரான சாந்தன் என்பவரும் அவரின் உதவியாளர் பரசுராமன் என்பவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.; இப்படுகொலையின் எதிரொலியாக பிற்பகல் 13.15 மணியளவில் ஆரையம்பதியிலுள்ள பெற்றோள் நிலையம் ஒன்றிற்கு அருகாமையில்வைத்து மூன்று முஸ்லிம்கள் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு உள்ளானதாகவும் தெரியவருகின்றது முன்னைய துப்பாக்கிச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்னும் அடையாளங்காண்பதற்கு முன்னர் மூன்று அப்பாவி முஸ்லிம் பொதுமக்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களால் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை கண்டிக்கத்தக்க விடயம் மட்டுமன்றி எக்காரணங் கொண்டும் நியாயப்படுத்தமுடியாத விடயமுமாகும்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களான இருவரின் கொலை தொடர்பான சந்தேக நபர்கள் உடனடியாக அடையாளங்காணப்பட்டு அவாகள்மீது துப்பாக்கிப் பிரயோகம் நடாத்தப்பட்டிருப்பின் அதுவிடயம் நியாயப்படுத்தக்கூடியதாக அமைந்திருக்கலாம் மாறாக யாரோ அப்பாவிப் பொதுமக்கள்மீது தமது ஆத்திரத்தினை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் மேற்கொண்டிருப்பதனை நாம் அராஜக நடவடிக்கையாகக்கருதி அதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.
இக்கொலைகளுக்கான சூத்திரதாரிகள் யார்?
இக்கொலைகளுக்கான சூத்திரதாரிகள் யார்? இப்படுகொலைகள் இன்று (22-05-08) நடைபெற்றமைக்கான பின்னணிகள் என்ன? நடந்து முடிந்த மாகாண சபைக்கான தேர்தலில் தோல்வியினைத் தழுவிய அரசியல் கட்சிகளின் பின்னணி இப்படுகொலைக்கு காரணமாய் இருக்கமுடியுமா? இவற்றிற்கான விடையினையே நாம் இங்கு ஆராயவேண்டியள்ளது.
சாந்தன் என்பவர் வழமையாக இப்பாதையூடாகவே மட்டுநகருக்கான தமது பயணத்தினை மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில சாந்தன்மீது தாக்குதல் நடாத்துவதற்கு சாதாரணமான முஸ்லிம் நபர்கள் எவரேனும் திட்டமிட்டிருப்பின் அதனை அவர்கள் நடைமுறைப்படுத்துவதற்கான பல சந்தர்ப்பங்கள் எற்கனவே அமைந்திருந்தது. ஆனால் அதனை இன்று மேற்கொண்டமைக்கான பின்னணியில் பிரபாகரன் தலைமையிலான மனநோயாளிகளினதும், தேர்தலில் தோல்வியுற்ற அரசியல் கட்சியான சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸினரதும் தொடர்புகள் இருப்பதற்கான நியாயபூர்வமான சான்றுகள வெளியாகியுள்ளன. தேர்தல் முடிந்த நிலையிலும மாகாண சபையின் நிர்வாகத்தினை ஆரம்பிப்பது தொடர்பில் அரச தரப்பினரான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினருக்கு பெருமபான்மையற்ற நிலையில் இழுபறிநிலை தோன்றியது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் துணைத் தலைவரான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் மாகாண முதலமைச்சலாக நியமிக்கப்படும் பட்சத்தில் தாங்கள் பதவிகளை ராஜினாமாச் செய்யப்போவதாக ஹிஸ்புல்லா அணியினர் எச்சரிக்கை விடுத்தனர். அவருடன் இணைந்து அதாவுல்லா அணியினரும் தாமும் ஹிஸ்வுல்லா அணியினருக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அறிக்கைகளை விடுத்திருந்தனர். இதனிடையே ரணில் விக்கிரமசிங்காவின் தலைமையிலான ஐ.தே கட்சியின் மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்ட ரவூப் ஹக்கீம் அவர்கள் சந்திரகாந்தன் அவாகள் முதலமைச்சராக நியமிக்கப்பட்டால் கிழக்கில் முஸ்லிம், தமிழ் கலவரம் ஒன்று இடம்பெறும் எனவும் ஆரூடம் கூறியிருந்தார். (முஸ்லிம், தமிழ் கலவரம் ஒன்றினை ஏற்படுத்துவோம்) என்பதனை நேரடியாகக்கூறமுடியாத நிலையில் அவ்வாறான கருத்தினை அவர் வெளியிட்டிருந்தார். அத்துடன் அவர் சார்ந்த ஐ.தே.கட்சியினரும் சந்திரகாந்தன் நியமனம் தொடர்பில் பாரதூரமான விளைவுகள் ஏற்படுமென பகிரங்கமாகவே அறிக்கை விடுத்திருந்தனர்.
அதுமட்டுமன்றி லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் ரீ.பி.சி வானொலியின் ஆய்வாளரென கூறப்படும் விஸ்வலிங்கம் சிவலிங்கம் என்பவர் தமது உரையில் முஸ்லிம் உறுப்பினர் ஒருவர் முதலமைச்சராக நியமனம் பெறுவதே சரியானதென தேசம் என்னும் ஊடகம் ஒன்றிற்கு அறிக்கை விடுத்திருந்தார் அத்துடன் தமிழ் சமாதான ஒன்றியம் என்னும் பெயரில் லண்டனிலிருந்து இயங்கும் அமைப்பினரும் கிழக்கில் ரி.எம்.வி.பியினரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டால். அங்கு ஒரு இனக்கலவரம் உருவாகும் என்பதனை உறுதிபட தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கிழக்கு மாகாணத்திற்கான தனியான நிர்வாகம் ஒன்று அமைவதனை அனுமதிக்கக்கூடாது என்பதில் முன்னாள் புலிகளும், இந்நாளில் தம்மை ஜனநாயக மேதைகளாகக் காட்டிக்கொள்ள முற்படுபவர்களும், யாழ் மேலாதிக்க சிந்தனையில் ஊறிப்போன சில சக்திகளும் அவர்களின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு துணைபோகும் சில கோடரிக்காம்புகளும் கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்படவிருந்த மாகாண சபையின் நிர்வாகத்தினை இயங்கவிடாது தடுப்பதற்கான தமது காத்திரமான பங்களிப்புகளை கச்சிதமாக மேற்கொண்டனர்.
இவ்வாறான நடவடிக்கைகளை சின்னாபின்னமாக்கும் வகையில் கடந்த (21-05-08) ந் திகதியன்று கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சின்னத்தில் வேட்பாளாகளாக நின்று வெற்றியீட்டிய ஹிஸ்புல்லாவும் அவரது அணியினரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் முன்னிலையில் தமது சத்தியப் பிரமாணத்தினை மேற்கொண்டு அமைச்சுப் பதவியினையும் எற்றுக்கொண்டனர்.
எற்கனவே ஹிஸ்பல்லா தலைமையிலான அணியினருக்கும் அரச தரப்பினருக்குமிடையில் எற்பட்டிருந்த முரண்பாடு மாகாண சபையின் நிர்வாகக் கட்டமைப்பினை தடுத்து நிறுத்துமெனவும் அதன்மூலம் தமிழ், மக்கள் விடுதலைப் புலிகள் ஆத்திரமடைந்து கிழக்கில் ஒரு தமிழ், முஸ்லிம் கலவரத்தினை ஏற்படுத்துவரெனவும் அதன்மூலம் தாம் அரசியல் குளிர்காய முடியுமெனவும் காத்திருந்த தேச விரோதிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் அடிவருடியான ரவூப் ஹக்கீம் அவர்களும் தமிழ் மக்களின் ஏகவிரோதிகளான பாஸிஸப் புலிகளும் ஏமாற்றமடைந்தனர். அதன் வெளிப்பாடே நேற்றைய தினம் ரீ.எம் வி.பியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான சாந்தன்மீதும் அவரது உதவியாளரான பரசுராமன்மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலும் கொலையுமாகும். ஹிஸ்புல்லாவின் இறுதி முடிவினை எதிர்பார்த்தி்ருந்தவர்களுக்கு கிடைத்த ஏமாற்றம் மறுநாளே தமது திட்டத்தினை நிறைவேற்றவேணடிய தேவையினை உருவாக்கியது. அதற்கமைய அத்தாக்குதல் சம்பவத்தினை முஸ்லிம் தரப்பினரே மேற்கொண்டதாக வெளிக்காட்டுவதற்காக பாஸிஸப் புலியின் கொலையாளிகள் முஸ்லிம்கள் அணியும் குல்லாவை (தொப்பி) அணிந்துகொண்டு இப்படுகொலையினை மேற்கொண்டுள்ளனர். இப்படுகொலை முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்டதாக வெளிக்காட்டுவதன் மூலமே தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையில் இனக்கலவரம் ஒன்றினை ஏற்படுத்த முடியுமென்பதில் மாகாண சபைக்கான தேர்தலில் தோல்விகண்டவர்கள் திட்டமிட்டு நேற்றைய தினம் இதனை நடைமுறைப்படுத்தினர். ஆனால் அவர்கள் தேர்தலில் மட்டும் தோல்வியடையவில்லை, முக்கூட்டணியினரும் இணைந்து செயற்படுத்திய நாசகார சதி முயற்சியிலும் படுதோல்வியடைந்தனர்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கவனத்திற்கு!
நீங்கள் இன்று ஆயுததாரிகள் அல்ல ஆயத வன்முறையினை முழுமையாக நிராகரித்த நிலையில் ஜனநாயக நீரோட்டத்தில் உங்களை இணைத்துள்ளீர்கள். உங்களின் ஜனநாயக செயற்பாடுகளுக்கு துணை நிற்கும் நோக்குடனேயே பாஸிஸப் புலியின் அடக்குமுறையின்கீழ் கடந்த இருபது வருடகாலமாக சிக்கித் தவித்த கிழக்கு மக்கள் இன, மத, மொழி என்னும் வேறபாடுகளை மறந்து உங்களை தங்களின் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுத்தனர். நீங்கள் இன்று கிழக்கு வாழ் அனைத்து இனமக்களினதும் பிரதிநிதிகளே தவிர தனியான தமிழினத்தின் பிரதிநிதிகள் அல்ல. இனரீதியான அரசியலை கிழக்கிலிருந்து விரட்டியடித்து அனைத்து மக்களும் இலங்கையர்கள் என்னும் தாரக மந்திரத்தினை செயல் வடிவில் நிரூபிக்கவேண்டிய கடமைப்பாடு உங்களிடம் சுமத்தப்பட்டுள்ளது. எனவே நேற்றைய தினம் இடம்பெற்ற தவறுபோன்று எதிர்காலத்தில் என்றுமே இடம்பெறாதவாறு கட்டிக்காக்கவேண்டிய பொறுப்பும், கடமையும் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதனை சற்றும் மறந்துவிடாதீர்கள்.
தாய் நாட்டை சீரழித்து சின்னாபின்னமாக்கிய ஐக்கிய தேசியக் கட்சியினரின் எடுபிடிகள் அல்ல நீங்கள், அவர்களால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைக்கும் உங்களால் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட வன்முறைக்கமிடையில் வேறுபாடு இருப்பதாக நான் காணவில்லை, திருநெல்வேலியில்வைத்து (1983யூலை23) பாஸிஸப் புலி நடாத்திய ராணுவத்தினர்மீதான தாக்குதலுக்கு (13 பேர் கொல்லப்பட்டமைக்கு) பதிலளித்த ஐ.தே.கட்சியின் பயங்கரவாதிகள் வெலிக்கடையில் சிறைக்கைதிகளாக இருந்த 53 தமிழர்களை மிருகங்களைப்போன்று வெடட்டியும், கொத்தியும் கொலை செய்தார்கள். அத்தோடு திருப்தியடையாதவர்கள் தெற்கில் வாழ்ந்த தமிழ் மக்கள் 641 பேரை கொன்று குவித்ததுடன் அவர்களின் 6.000. மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை சூறையாடி அம்மக்களை அங்கிருந்து வடக்கு கிழக்கிற்கு விரட்டியடித்து உடமைகள் அனைத்தையும் தீயிட்டு நாசப்படுத்தினார்கள்.
நீங்கள் அந்த தேசத்துரோகிகளிலிருந்தும், நாசகார சக்திகளிலிருந்தும் வேறுபட்டவர்கள் உங்களின் சிந்தனையில் இன, மத, மொழி என்னும் வேறுபாடுகள் எள்ளளவும் துளிர்விட அனுமதிக்கக்கூடாது அதனைக் கருத்தில் கொண்டு உங்களின் எதிர்கால அசியல் நடவடிக்கைகள் அமையவேண்டுமென்பதனை அறிவுறுத்த விரும்பகின்றோம்.
ஆக்கம் --குமாரதுரை