நடிகை சரோஜா தேவிக்கு திரையுலகின் வாழ்நாள் சாதனையாளர் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இவர் உள்பட நான்கு பேர் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசு இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாடு சுதந்திரம் பெற்றதன் 60-வது வைர விழா கொண்டாட்டங்கள் நிறைவு பெறுவதை முன்னிட்டு திரையுலகில் சாதனை படைத்த நான்கு பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகை சரோஜா தேவி, பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர், ஹிந்தி நடிகர் திலீப்குமார், பழம்பெரும் இயக்குநர் தபன் சின்ஹா ஆகியோர் விருதுகளைப் பெறுகின்றனர். உடல் நலம் குன்றியுள்ள தபன் சின்ஹாவுக்கு கோல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் மேற்கு வங்க ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி, மத்திய ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்சி ஆகியோர் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) விருதை வழங்குகிறார்கள். மற்றவர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தலைமையில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.