சைவம் சாப்பிடுவோரில் கவர்ச்சிகரமானவராக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தேர்வு

ஆசியாவிலேயே, சைவம் சாப்பிடுவோரில் கவர்ச்சிகரமானவராக பாலிவுட் நடிகர் அமிதாப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.விலங்குகள் நல உரிமை பாதுகாப்பு அமைப்பு, ஆசியாவில் சைவம் சாப்பிடுவோரில் கவர்ச்சிகரமான நபர்கள் யார் என்பது குறித்து ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆண்களில் பாலிவுட் நடிகர் அமிதாப், ஆசியாவிலேயே கவர்ச்சிகரமானவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தாய்வானைச் சேர்ந்த நாடக நடிகர் பர்பி சூ, இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

பெண்களை பொறுத்தவரை ஹாங்காங்கை சேர்ந்த பிரபல நடிகையும், பாடகியுமான பயே வாங், கவர்ச்சிகரமானவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே நாட்டைச் சேர்ந்த நடிகை மேக்கி க்யூ இரண்டாவது இடத்தையும், பாப் பாடகியும், நடிகையுமான ஸ்டெபி டாங் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.ஆசியாவைத் தவிர பிற நாடுகளைச் சேர்ந்தவர்களில் பாடகர் கிறிஸ் மார்ட்டின், பாப் பாடகர் லியோனா லீவிஸ் ஆகியோர் சைவம் சாப்பிடுவோரில் சிறந்தவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விலங்குகள் நல உரிமை பாதுகாப்பு அமைப்பின் ஆசியாபசிபிக் பிராந்திய இயக்குனர் ஜாசன் பாக்கர் கூறுகையில், "சைவம் சாப்பிடுவது, உடல் நலத்திற்கு மட்டுமல்ல, சுற்றுச் சூழலுக்கும் நல்லது. விலங்குகளை அழிக்காமல் பாதுகாக்க வேண்டியது மனிதர்களின் கடமை. அசைவம் சாப்பிடாமலேயே, தங்களை கவர்ச்சிகரமாக காட்டிக் கொள்ள முடியும் என்பதை அமிதாப் போன்றவர்கள் நிரூபித்துள்ளனர்' எனத் தெரிவித்துள்ளார்..