மர்ம யோகியில் கமல் ஜோடியாக ஸ்ரேயா

கமலின் மெகாபட்ஜெட் படம் மர்ம யோகி. ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இப்படம் தயாராகிறது. சரித்திர கால படம் என்பதால் உடைகள் போர் பிரமாண்ட அரண்மனைகள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கோடிக்கணக்கான பணத்தை இறைத்து அரங்குகள் அமைத்து காட்சிகளை எடுக்கின்றனர். யுத்த காட்சிகள், சுவீட்சர்லாந்தில் படமாக்கப்படுகிறது. ஹாலிவுட் நிபுணர்களை வைத்து போர் காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் பிரமாண்ட படுத்தப்படுகின்றன.

வெளிநாட்டு ஸ்டண்ட் நடிகர்கள், ஒளிப்பதிவு நிபுணர்கள், மேக்கப் மேன்கள் இதில் பணியாற்ற உள்ளனர். இப்படத்துக்கான நடிகர்- நடிகைகள் தேர்வு நடக்கிறது. கமல் ஜோடியாக ஸ்ரேயாவை நடிக்க வைக்க பேச்சு நடக்கிறது. சிவாஜியில் ரஜினியுடன் ஜோடி சேர்ந்த அவர் இப்படத்தில் கமலுடன் இணைந்து நடிக்கிறார்.

தற்போது விக்ரம் ஜோடியாக கந்தசாமி படத்தில் நடித்து வருகிறார். இந்தி நடிகை ஹேமமாலினியும் இப் படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது. அமிதாப்பச்சன், இந்தி நடிகை ரேகா ஆகியோரும் இதில் நடிக்கிறார்கள் என்று பேசப்பட்டது.

இது குறித்து அமிதாப்பச்சனிடம் கேட்டபோது மறுத்தார். மர்மயோகியில் நடிப்பது பற்றி எந்த பேச்சும் இல்லை. தவறான தகவல் என்றார். ஏற்கனவே தசாவதாரம் பாடல் கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தபோது அமிதாப்பச்சனும் கலந்துகொண்டார்.

அப்போது கமலுடன் இணைந்து நடிக்க விரும்பம் தெரிவித்தார். மர்ம யோகியில் அதற்கான வாய்ப்பு ஏற்படும் என கருதப்பட்டது. ஆனால் அதில் நடிக்கவில்லை என முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.