8 வருடம் காதலித்த கம்ப்யூட்டர் இன்ஜினீயரை மணக்கிறார் நடிகர் சத்யராஜ் மகன் சிபிராஜ்

நடிகர் சிபிராஜ், எட்டு வருடமாக தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்கிறார். நடிகர் சத்யராஜ் மகன் சிபிராஜ். ‘ஸ்டூடண்ட் நம்பர்&1’ என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். பிறகு ‘ஜோர்’, ‘மண்ணின் மைந்தன்’, ‘லீ’ உட்பட பல படங்களில் நடித்தார். இவருக்கும் கடலூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் வைத்தியநாதன் என்பவரது மகள் ரேவதிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இவர்களது திருமணம் செப்டம்பர் மாதம் 14.ம் திகதி சென்னை தி.நகரில் உள்ள அக்கார்டு மெட்ரோபாலிட்டன் ஹொட்டலில் நடக்கிறது. 15&ம் திகதி மேயர் ராமநாதன் செட்டியார் ஹாலில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. மணமகள் ரேவதி, தகவல் தொழில்நுட்பத்தில் இன்ஜினீயரிங் முடித்து விட்டு, தனியார் நிறவனத்தில் பணியாற்றி வருகிறார். இது காதல் திருமணம்.

இதுபற்றி சிபிராஜ் கூறும்போது, ‘‘என் உறவினர் மூலம் ரேவதியின் அறிமுகம் கிடைத்தது. அப்போதே அவரை காதலிக்கத் தொடங்கினேன். 6 மாதத்துக்குள் இருவரும் காதலை பரிமாறிக் கொண்டோம். பிறகு கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தோம். எனது காதலை பற்றி அப்பாவிடம் சொன்னதும் பச்சைக்கொடி காட்டிவிட்டார். இப்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

சத்யராஜ் கூறும்போது, ‘‘காதலுக்கு நான் எதிரியில்லை. சிபி காதலை சொன்னதும் உடனே சம்மதித்தேன். ஜாதி மதங்களில் நம்பிக்கை இல்லை. அரசாங்க சான்றிதழ்படி இது கலப்பு திருமணம்தான். திருமண சடங்குகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் பெண்வீட்டார் நம்பிக்கையை மதித்து, அவர்கள் விருப்பப்படி திருமணம் செய்து வைக்க இருக்கிறோம்’’ என்றார்.