நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி நிச்சயம் மெளனம் கலைத்தார் பிரதமர் மன்மோகன் சிங்

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த பிரச்னையில், இடதுசாரிகள் தங்களின் ஆதரவை வாபஸ் பெற்றாலும், மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறும்' என, பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.பிரதமரின் மீடியா ஆலோசகர் சஞ்சய்பாரு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், நமது அணுசக்தி தொடர்பான முன்னேற்ற திட்டங்களை எந்த வகையிலும் பாதிக்காது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மேற்கொண்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை இந்திய மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்; அதற்கு ஆதரவு தர வேண்டும். சர்வதேச அணுசக்தி ஏஜென்சியுடன் செய்து கொள்ளப் போகும் பாதுகாப்பு ஒப்பந்தத்தால், இந்தியாவின் அணுசக்தி தொடர்பான திட்டங்கள் பாதிக்கப்படலாம் என, இடதுசாரிகளும், பாரதிய ஜனதா கட்சியும் குற்றம் சாட்டுகின்றன, அப்படி எதுவும் நடக்காது.

எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனில், எரிசக்தி சவால்களை சமாளிக்க வேண்டும் எனில், உயரிய தொழில் நுட்ப மேம்பாட்டை அடைய வேண்டும் எனில், நல்ல காரியத்திற்காக அணுசக்தியை பயன்படுத்தும் விஷயத்தில் சர்வதேச அளவில் ஒரு கூட்டுறவு நிலைமை உருவாக வேண்டும்.
சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தால், அணு எரிபொருள் சப்ளை குரூப்பில் உறுப்பினராக உள்ள 45 நாடுகளின் ஒத்துழைப்பை இந்தியா பெற முடியும்.இந்தியா ஒரு தன்னிச்சையான வெளியுறவுக் கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. அந்த விஷயத்தில் எந்த விதமான அன்னிய தலையீட்டையும் அனுமதிக்காது. அனைத்து ஆசிய நாடுகளுடனும் நல்லுறவை கொண்டிருக்க இந்தியா தொடர்ந்து முயற்சிக்கும். நாட்டின் வெளியுறவுக் கொள்கை விஷயத்தில், எந்த விதமான சமரசத்திற்கும் இடமில்லை.பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், விலைவாசியை குறைக்கவும், பொருளாதார வளர்ச்சி சீராக இருப்பதை உறுதி செய்யவும், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதே, பணவீக்க அதிகரிப்புக்கு காரணம். இந்த பணவீக்கத்தால் ஏழை மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். விவசாய உற்பத்தியை பெருக்க மட்டுமின்றி, விவசாயிகளின் நலனை காக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தினால், மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரி கட்சிகள் வாபஸ் பெற்றுள்ளன. இருந்தாலும், வரும் 22ம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, எனது தலைமையிலான அரசு வெற்றி பெறும்.இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
18ம் திகதி ஐ.ஏ.இ.ஏ., கவர்னர்கள் கூட்டம் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற வேண்டும் எனில், இந்தியாவில் உள்ள அணு உலைகளின் பாதுகாப்பு தொடர்பாக, வியன்னாவில் உள்ள சர்வதேச அணுசக்தி முகமையுடன் (ஐ.ஏ.இ.ஏ.,) ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். அத்துடன் அணு எரிபொருள் சப்ளை நாடுகளுடனும் ஒப்பந்தம் செய்ய வேண்டும்.சர்வதேச அணுசக்தி முகமையுடன் செய்து கொள்ளப் போகும் பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பான வரைவு அறிக்கையை, மத்திய அரசு ஏற்கனவே தயார் செய்து, அனுப்பி விட்டது.
அந்த வரைவு அறிக்கையை வரும் 18ம் திகதி, சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் கவர்னர்கள் குழு பரிசீலிக்கிறது. வியன்னாவில் நடக்கும் இந்த பரிசீலனையின் போது, இந்தியா தனது நிலையை விவரிக்கும். இதற்காக வெளியுறவு அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் இன்று வியன்னா செல்கிறார். வியன்னாவில் நடக்கும் கவர்னர்கள் கூட்டத்தில், சர்வதேச அணுசக்தி முகமையுடன் இந்தியா செய்து கொள்ளும் பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக ஒருமித்த கருத்து உருவானால்தான், இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறும் என்பது குறிப்பிடத்தக்கது.