புலம்பெயர் புலிப்பயங்கரவாதிகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் எச்சரிக்கை

பயங்கரவாதத்தை ஆதரிப்போருக்கு கடும் செய்தியை விடுத்திருப்பதாக இலங்கை ஜனாதிபதியிடம் பிரித்தானிய அரசாங்கம் விளக்கமளித்துள்ளது. கொழும்புக்கு பயணம் செய்திருக்கும் பிரித்தானிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மலோச் பிறவுண் (Malloch Brown) பிரபு நேற்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்பொழுது மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காண்பதற்கு பிரமிக்கத்தக்க தீர்வுப் பொறிமுறையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஏற்படுத்தியிருப்பதோடு அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி அதன் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் நம்பிக்கையை ஊட்டும் வகையில் அமைந்திருப்பதாக பிரித்தானிய வெளியுறவுத்துறை
இணை அமைச்சர் கருத்து வெளியிட்டிருப்பதாக சிறீலங்கா அதிபர் செயலகம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

பயங்கரவாதத்திற்கு சட்டவிரோதமாக உதவி புரிந்தமைக்காக பிரித்தானியாவில் ஆறு பேருக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் தொடரப்பட்டிருப்பதோடு இதன் மூலம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடுமையான செய்தி விடுக்கப்பட்டிருப்பதாகவும் மலோச் பிறவுண் பிரபு கூறியுள்ளார்.
இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு முன்னர் பாதுகாப்புத்துறை செயலர் கோத்தபாய ராஜபக்ஸ, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரை பிரித்தானிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவின் வெளியுறத்துறைப் பிரதி அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஜனநாயகம் மற்றும் மனித உரிமையைப் பேணுவதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டுள்ள வெற்றிகரமான நடவடிக்கைகளினால் சர்வதேச சமூகம் இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு உதவ விருப்பம் தெரிவித்துள்ளதாக ஆபிரிக்க, ஆசிய மற்றும் ஐக்கிய நாடுகள் என்பவற்றிற்கான பிரித்தானியாவின் வெளியுறவுத்துறை பிரதி அமைச்சர் மலக் பிறவுண் தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரதி அமைச்சர் பிறவுண் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று அலரிமாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இச்சந்திப்பின் போது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பயங்கரவாதத்தைத் தோல்வியுறச் செய்து ஜனநாயகத்தை அரசாங்கம் நிலைநாட்டியுள்ளதையும், கிழக்கில் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திச் செயற்பாடுகள் சம்பந்தமாகவும் ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.
அத்துடன், கிழக்கு அபிவிருத்திப் பணிகள் வடக்கு மக்களின் சுபீட்சமான எதிர்காலத்திற்கான சிறந்த செய்தியை வெளிப்படுத்தி நிற்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்களை ஜனநாயக வழிமுறைக்குக் கொண்டு வந்துள்ளோம். கடந்த காலத்தில் புலிகளின் சிறுவர் படையில் செயற்பட்டவரே தற்போது கிழக்கு மாகாண முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக் காட்டியதாகவும் ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.