மன்னாரில் கடற்புலிகளில் முக்கிய தளம் அமைதுள்ள விடத்தல் தீவு பகுதி இன்று காலை படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இராணுவத்தின் 58 ஆவது படையணி, கமாண்டோ படையணி என்பவற்றிலுள்ள படைவீரர்கள் இணைந்து மேற்கொண்ட இராணுவ முன்னெடுப்பின்போதே இப்பகுதி மீட்கப்பட்டுள்ளது. இப்பகுதி மன்னாரிலிருந்து வடக்காக 20 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. புலிகள் தாக்குதலுக்காகப் பயன்படுத்தி வந்த மிகவும் முக்கிய இடமாக இப்பிரதேசம் காணப்பட்டது. கடற்புலிகளின் பிரதான விநியோகத்தளமாகவும் இது விளங்கியது என்றும் பாதுகாப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
மன்னார், விடத்தல்தீவு பகுதிக்கு வடக்குப் பிரதேசத்திலுள்ள புலிகளின் தளம் மீது விமானப் படையின் எம். ஐ. 24 ரக ஹெலிகொப்டர் நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.