ஈரான் பிரதிநிதியைச் சந்தித்துப் பேசுவதற்கு சிறப்புத் தூதுவரை அனுப்ப அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ச் புஷ் முடிவு செய்துள்ளார். ஈரானின் அணு உலைகளைக் கண்காணிக்க ஒத்துழைக்குமாறு இந்த பேச்சுவார்த்தையின்போது ஈரான் பிரதிநிதியிடம் அமெரிக்கா கேட்டுக்கொள்ளும் என்று தெரிகிறது. ஈரான் அணுகுண்டு தயாரிப்பதை தடுக்கும் வகையில் அந் நாட்டில் உள்ள அணு உலைகளைக் கண்காணிக்க சர்வதேச அணுசக்தி முகமையை அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கான பேச்சுவார்த்தை கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இதில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றன. ஈரான் பிரதிநிதியாக சயீத் ஜலிலி பங்கேற்றார். அமெரிக்கா பங்கேற்கவில்லை. அடுத்த கூட்டம் இந்த வார இறுதியில் நடைபெறுகிறது. இதில் அமெரிக்கா பங்கேற்கிறது. யுரேனியம் செறிவூட்டல் பணியைக் கைவிட்டால்தான் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் புஷ் அறிவித்திருந்தார்.
ஆனால் திடீர் திருப்பமாக அமெரிக்க வெளியுறவு அதிகாரி வில்லியம் ஜே பர்ன்ஸ் ஈரான் பிரதிநிதி சயீத் ஜலிலியைச் சந்திக்கிறார். இது அமெரிக்க நிலையில் பெரும் மாற்றமாகக் கருதப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரானைத் தாக்க தயாராகுமாறு இஸ்ரேலிடம் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளதாக செய்தி வெளியானது.ம் குறிப்பிடத்தக்கது.