கிழக்கு முதலமைச்சர், திரு சந்திரகாந்தன் மற்றும் உறுப்பினர்களை திருமலையில் சந்தித்த பிரித்தானிய வெளியுறவு உதவி அமைச்சர் மல்லோ பிர

பிரபாகரன் தலைமையிலான பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டு தேர்தல் ஒன்றின்மூலம் தெரிவசெய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் திரு சந்திரகாந்தன் மற்றும் மாகாண சபையின் உறுப்பினர்களை திருமலை உள்துறைமுக வீதியில் அமைந்துள்ள மாகாண சபையின் அலுவலகத்தில் பிரிட்டிஷ் உதவி வெளியுறவு அமைச்சர் மல்லோ பிரவுண் பிரபு அவர்கள் நேற்று புதன்கிழமை காலை சந்தித்தார் .இச்சந்திப்பின்போது கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைவரம் பற்றியும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகவும் கேட்டறிந்தார்.

பிரிட்டிஷ் அமைச்சருடன் கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் தூதுவர் பீற்றர் ஹேவீஸ் மற்றும் ராஜதந்திரிகளும் வந்திருந்தனர். சந்திப்பிற்கு பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. பிரிட்டிஷ் அமைச்சரை, பிரதம செயலகத்தில் முதலமைச்சர் மற்றும் மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் வரவேற்றனர். சந்திப்பின் பின்னர் மாகாண சுகாதார அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா வெளியில் நின்ற செய்தியாளர்களிடம் பிரிட்டிஷ் அமைச்சருக்குத் தாங்கள் கூறியதை விவரித்தார். 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் கீழ் வழங்க வேண்டிய அதிகாரங்களை மாகாண சபைக்குக் கையளிப்பது தொடர்பாக விரைவில் ஜனாதிபதியுடன் பேச்சுகள் நடத்தவிருப்பதாகவும் அது பற்றி பிரிட்டிஷ் அமைச்சரின் கவனததுக்குக் கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

13 ஆவது திருத்தத்தின் படி பொலிஸ் அதிகாரங்கள் முழுமையாக முதலமைச்சருக்கு வழங்கப்படவேண்டும். அப்படி இன்னும் நடைபெறவில்லை. பொலிஸ் அதிகாரங்கள் இன்னும் மத்தியஅரசின் கைகளில் தான் உள்ளது என்பதை பிரிட்டிஷ் அமைச்சருக்கு தாங்கள் சுட்டிக் காட்டியதாகவும் மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

கடத்தல்கள் மற்றும் ஜனநாயக விரோத சம்பவங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வெற்றியளித்தள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர் மாகாண அபிவிருத்திக்கு அவசியமாக தேவைப்படும் நிதி பற்றியும் பிரிட்டிஷ் அமைச்சருக்கு விளக்கினோம் என்றும் அவர் கூறினார். காலை 10.30 மணியளவில் ஆரம்பமான சந்திப்பு நண்பகல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.