பாலிவுட் பிரபலங்கள் அமீர்கான், ஷாருக்கானைத் தொடர்ந்து, நடிகை ஷில்பா ஷெட்டியும் திரைப்பட தயாரிப்பில் இறங்கியுள்ளார்.பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: இனிமேல், ஆண்டு தோறும் இரண்டு திரைப்படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளேன். நடிகையாக எனக்கு கிடைத்த அனுபவங்கள், திரைப்பட தயாரிப்புக்கு மிகவும் உதவியாக இருக்கும். எனது தயாரிப்பில் வெளியாகும் முதல் படம், ஆக்ஷன் கலந்த காமெடிப் படமாக இருக்கும். மனிஸ் ஷா இதை இயக்குகிறார்.
விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. பிரிட்டனில் நடந்த பிக் பிரதர் "டிவி' நிகழ்ச்சியில் நான் வெற்றி பெற்றேன். இதையடுத்து, நான் தொடர்ந்து பிரிட்டனில் தங்கப் போவதாக செய்திகள் வெளியாயின. மற்ற அனைத்து நாடுகளையும் விட, இந்தியாவில் வசிப்பதை தான் பெருமையாக கருதுகிறேன். கடைசியாக நான் நடித்து வெளியான "அப்னே' மற்றும்"மெட்ரோ' ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்றன.இதன் மூலம் ரசிகர்கள் என்னை அதிகமாக விரும்புவது தெரிகிறது. இதைவிட ஒரு நடிகைக்கு வேறு என்ன வேண்டும்.இவ்வாறு ஷில்பா ஷெட்டி கூறினார்