

கச்சத்தீவு பிரச்சினையை முடிந்து விட்ட பிரச்னையாகக் கருதாமல், ஒப்பந்தத்தை திருத்தி அமைக்கிற முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்,'' என மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.இலங்கை ராணுவத்தினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படும் பிரச்சினையில் மத்திய அரசு தலையிடக் கோரி, தி.மு.க., சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று உண்ணாவிரதம் நடந்தது.
சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தை துவக்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது: இலங்கை அரசால் தமிழர்கள் வேதனைக்கு ஆளாக்கப்படும் போதெல்லாம் நம் எதிர்ப்புணர்வைக் காட்டியுள்ளோம். அதைப் பொருட்படுத்தாமல் இலங்கை அரசு நடந்து கொள்வதும், அதைத் தட்டிக் கேட்க வேண்டுமென்று நாம் மத்திய அரசில் முறையீடு செய்வதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.
கச்சத்தீவை தி.மு.க., விட்டுக் கொடுத்துவிட்டது அதனால், இந்த தீமைகளை நாம் சந்திக்க நேரிடுகிறது' என்று சொல்கிறவர்களும் உண்டு. இந்திரா பிரதமராக இருந்த போது 1974ல் ஏற்பட்ட ஒப்பந்தப்படி, கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுத் தருவது என்ற உடன்பாடு ஏற்பட்டது. இதை நாம் ஏற்றுக்கொள்ளாததோடு, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, கச்சத்தீவை விட்டுத் தர முடியாது என மத்திய அரசுக்குத் தெரிவித்திருக்கிறோம்.
இது தொடர்பாக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை நான் தான் முன் மொழிந்தேன். கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்படக் கூடாது. அதை தமிழ் மக்கள் விரும்பவில்லை என்பதைப் பற்றி, பல நேரங்களில் மத்திய அரசுக்கு தமிழக அரசு எடுத்துச் சொல்லியிருக்கிறது. ஒவ்வொரு பேச்சுவார்த்தையிலும் இந்தியா, கச்சத்தீவை விட்டுத் தரக்கூடாது என்ற கருத்து, தமிழக அரசின் சார்பாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
தமிழக அரசைக் கலந்து கொள்ளாமல், அந்த வாய்ப்பை நமக்கு அளிக்காமல், அதை குறையாக எடுத்துச் சொல்லியும், பொருட்படுத்தாமல் அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றினர். இருப்பினும், கச்சத்தீவில் மீன் பிடிக்கும் உரிமை இந்திய மீனவர்களுக்கு இருக்க வேண்டும்; அங்குள்ள தேவாலயத்திற்குச் சென்று வருகிற உரிமை வேண்டும்; அங்கே வலை காயப்போடுவதற்கான உரிமை வேண்டும் என்று பல உரிமைகள் அந்த ஷரத்தில் சேர்க்கப்பட்டன.
எமர்ஜென்சியின் போது இலங்கையில் உள்ள அதிபர்கள், அலுவலர்கள், அதிகாரிகளுக்கும், தமிழகத்தில் இருந்த இந்திய அதிகாரிகளுக்கும் நடந்த கடிதப் போக்குவரத்தில் அவர்களாக எழுதிக் கொண்ட ஷரத்தின் படி, நம்முடைய உரிமைகள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. அதைப் பெறுவதற்காக நாம் இப்போதும் தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டு இருக்கிறோம்.நாம் தடுத்து நிறுத்தியும் கேளாமல், நாம் குரல் கொடுத்தும் கேளாமல், நம்முடைய குரலுக்கு மதிப்பில்லாமல் போய், கச்சத் தீவு இலங்கைக்குச் சென்றது.
இன்றைக்கு அந்த உரிமைகள் திரும்ப வேண்டுமென்பதற்காக வாதாடுகிறோம். கச்சத்தீவு பிரச்னையை, முடிந்து விட்ட பிரச்னையாகக் கருதாமல், ஒப்பந்தத்தை திருத்தி அமைக்கின்ற முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.இது போன்ற ஒருமித்து எடுக்கப்பட வேண்டிய முடிவுகளில், தமிழகத்தில் உள்ள தலைவர்கள் அரசியல் காரணங்களுக்காக வேறுபடுத்திக் கொள்ளக் கூடாது. தமிழர் வாழ்வு கேள்விக்குறியாகியுள்ள நிலையில் இதை மாற்றியமைக்க, ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். இந்த குரலுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.
தி.மு.க., எம்.பி.,க்கள் இன்று பிரதமருடன் சந்திப்பு: திருவள்ளூர் மாவட்ட தி.மு.க., சார்பில் திருவொற்றியூர் நகராட்சி எதிரே நடந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தலைமை வகித்த மத்திய அமைச்சர் பாலு, நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க., உயர்நிலைக் குழு தீர்மானத்தின்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை நான் சந்தித்து, தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் துன்புறுத்தப்படுவதையும், சுட்டுக் கொல்லப்படுவதையும் எடுத்துக் கூறினேன்.
நாளை (இன்று) மாலை 5 மணிக்கு பிரதமரை தி.மு.க., எம்.பி.,க்கள் குழு சந்தித்து, மீனவர்கள் நிலை குறித்தும், தி.மு.க.,வின் தீர்மானங்களையும் கொடுக்க உள்ளோம். சார்க் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளும் போது, இலங்கை ஜனாதிபதியிடம் தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து பேச வேண்டும் என வலியுறுத்துவோம்.
இவ்வாறு பாலு கூறினார். எம்.பி.,க்கள் கிருஷ்ணசாமி, குப்புசாமி, அமைச்சர் கே.பி.பி.சாமி உட்பட பலர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். ஜெயலலிதாவிற்கு பாராட்டு: உண்ணாவிரதத்தில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், ""1991ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று கொடியேற்றி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், "கச்சத்தீவை மீட்டே தீருவேன்' என்று சொன்னார். ஏதோ ஓர் ஆவேசத்திற்காக அவர் சொல்லவில்லை. கச்சத்தீவு தமிழகத்திற்கு, இந்தியாவிற்கு உரிமை உடையது என்ற அழுத்தந்திருத்தமான எண்ணத்தின் அடிப்படையில் தான் கச்சத்தீவை மீட்டே தீருவேன் என்று அவர் சொன்னார். ஆனால்,ஏன் இன்னும் அதை மீட்கவில்லை என்று நாம் கேட்கவில்லை. நானும் அதைப் பற்றி இன்றைக்கு விமர்சிக்க விரும்பவில்லை,'' என்றார்.