நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோர 48 மணி நேரமே எஞ்சியுள்ள நிலையில், பிஜேபி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிகள் தங்களுக்கு ஆதரவான எம்.பி.க்களின் எண்ணிக்கையை உறுதி செய்யும் வகையில் இன்று இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளன.பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எம்.பி.க்கள் மற்றும் சுயேட்சை உறுப்பினர்களுக்கு பிஜேபி மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான எல்.கே.அத்வானி இன்று விருந்தளிக்கிறார்.
இதனிடையே ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆதரவு எம்.பி.க்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங்கும் இன்று விருந்தளிக்கிறார். இந்த விருந்தில் பங்கேற்க சிபுசோரன், ஒமர் அப்துல்லா ஆகியோருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
291 எம்.பி.க்கள் ஆதரவு லாலு பிரசாத் தெரிவிப்பு
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ள நிலையில் மத்திய அரசுக்கு 291 எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாக மத்திய அமைச்சரும், ஆர்.ஜே.டி. தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். சிபுசோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா காங்கிரஸ் கூட்டணியில்தான் உள்ளது என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெறுவது உறுதி என்றும் லாலு பிரசாத் கூறியுள்ளார்.பிரதமராக வருவதற்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கோ, பிஜேபி தலைவர் அத்வானிக்கோ அதிர்ஷ்டம் இல்லையென்றும் அவர் தெரிவித்தார் முலாயம் சிங், ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் தம்முடன் இருக்கும் போது பெரும்பான்மையை அரசு நிரூபிப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று லாலு பிரசாத் கூறியுள்ளார்.