பிரிட்டனில் குடியேற வேண்டுமானால், பட்டதாரியாக இருக்க வேண்டும்; தொழிலாளி வேலைக்கெல்லாம் வர வேண்டாம்' என்று வெளிநாட்டினருக்கு பிரிட்டன் கண்டிப்புடன் கூறியுள்ளது.பிரிட்டனில் வேலை செய்ய பல நாடுகளில் இருந்து ஆண்டுக்கு ஐந்து லட்சம் பேர் விசா பெறுகின்றனர். இவர்களுக்கு விசா அளிக்கும் விஷயத்தில் இப்போது குடியேற்றத்துறை அதிக கவனம் செலுத்தி வருகிறது.
பல்வேறு நாடுகளில் இருந்து பல துறையில் பணியாற்ற பட்டதாரிகள், நிபுணர்கள் வருவதுடன், அதிக அளவில் தொழிலாளர்களும் வருகின்றனர். வெளிநாட்டினர் அதிக அளவில் நுழைவதை பிரிட்டன் அரசு விரும்பவில்லை. வெளிநாட்டினர் வருவதால், பிரிட்டன் பொருளாதாரத்துக்கு பலன் இருக்க வேண்டும். அதனால், பட்டதாரிகள் வந்தால் அவர்கள் திறமை மூலம் உற்பத்தி பெருகும்; பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்றும் பிரிட்டன் நினைக்கிறது.இதனால், புதிய விசா நடைமுறையை பிரிட்டன் கொண்டு வர உள்ளது. வெளிநாட்டில் இருந்து பிரிட்டன் வருவோரை 80 பிரிவுகளில் பிரித்துள்ளது. இதை ஐந்து அடுக்காக மாற்றி, அதன் கீழ் மிகவும் கவனமாக பரிசீலித்து விசா வழங்குவது என்று முடிவு செய்துள்ளது.
முதல் அடுக்கு மூலம் விசா வழங்கும் முறையை கடந்த பெப்ரவரியில் அமுல்படுத்தியது. இந்த அடுக்கில், டாக்டர்கள், கல்வியாளர்கள், இன்ஜினியர்கள், கம்ப்யூட்டர் நிபுணர்கள் ஆகியோர் பட்டியலிடப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் உள்ள இவர்கள் பிரிட்டனில் நுழைய விசா அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது மற்றும் ஐந்தாவது அடுக்கு விசா முறை இந்தாண்டு இறுதியில் அமுல்படுத்தப்படும். தனியார் நிறுவனங்களில் பணியாற்ற அழைப்பு பெற்ற வெளிநாட்டினர், தற்காலிக தொழிலாளர்களுக்கு இந்த அடுக்கின் மூலம் விசா அளிக்கப்படும்.நான்காவது அடுக்கில் மாணவர்களும், மூன்றாவது அடுக்கில், திறமையான தொழிலாளர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.இப்படி பிரித்து விசா வழங்குவதன் மூலம், பட்டதாரிகள், நிபுணர்களுக்கு அதிக அளவில் விசா வழங்கிவிட்டு, தொழிலாளர்களுக்கு குறைவான எண்ணிக்கையில் விசா வழங்க குடியேற்றத்துறை எண்ணியுள்ளது.
சமீபத்தில் எம்.பி.,க்களிடையே பேசிய பிரதமர் கார்டன் பிரவுன்,"பிரிட்டனுக்கு வெளிநாட்டவர் வரட்டும்; ஆனால், பிரிட்டன் பொருளாதாரத்தை உயர்த்தக்கூடிய பட்டதாரிகளாக இருக்க வேண்டும். தொழிலாளர்களை அதிக அளவில் வர அனுமதித்து, அதன் மூலம் பொருளாதாரம் பாதிக்கப்பட அனுமதிக்க முடியாது' என்று தெரிவித்தார். பிரிட்டனின் இந்த கிடுக்கிப்பிடி விசா முறையால், தனியார் நிறுவனங்களின் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்படும். பில்கேட்ஸ் உட்பட பிரபல நிறுவனங்களின் உரிமையாளர்கள் எல்லாம் பட்டதாரிகள் அல்லர். அப்படியிருக்கும் போது, பல முக்கிய நிறுவனங்கள், பிரிட்டனக்குவராது; அதனால், வர்த்தகம் பாதிக்கப்படும்; பொருளாதார வளர்ச்சி தடைப்படும் என்பது பிரதமருக்கு தெரியாதது வியப்பாக உள்ளது' என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.