குதிரை பேரம், சூட்கேஸ் கலாச்சாரம் என்ற புதிய அரசியல் சொற்கள் எல்லாம் அவற்றின் சூறாவளி சீற்றத்தை முடித்துக் கொண்டுள்ளது. இன்று பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் கூடியுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த விவாதம் நடைபெறுகிறது. விவாதத்தில், பிரதமர் மன்மோகன்சிங் நம்பிக்கை வாக்கெடுப்பை பிரேரணை செய்கிறார். காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி அவர்கள் விவாதத்தில் உரையாற்றுவார் என தெரிகிறது. காங்கிரஸ் கட்சி பொது செயலாளர், ராகுல் காந்தியும் உரையாற்றுகிறார். முன்னதாக நேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர், எம்.கே.நாராயணன், ராகுல் காந்தியை சந்தித்து அணுசக்தி ஒப்பந்தம் குறித்து எடுத்துரைத்ததாக தெரிகிறது. எனவே பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தில் ராகுல்,காந்தி அவர்களும் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேசும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி விவாதத்தில் பேசுவார் என பா.ஜ., கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்றும், நாளையும் நடைபெறும் இந்த விவாதம் சுமார் 16 மணி நேரம் நடைபெறுகிறது.
நம்பிக்கை தீர்மானம் பாராளுமன்றத்தில் விவாதம் தொடங்கியது
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இடது சாரிகள் ஆதரவை வாபஸ் பெற்றதால் மத்திய அரசு பெருமஇபான்மையை இழந்தது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை காங்கிரஸ் கூட்டணி அரசு நிரூபிக்க வேண்டும் என்று பா.ஜ.க., இடது சாரிகள் வலியுறுத்தின. இதை ஏற்று நாளை (செவ்வாய்க்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முன்வந்துள்ளது.
காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவை திரட்ட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆதரவாக வாக்களிக்க ரூ.25 கோடி வரை "குதிரை பேரம்'' நடந்ததாக சில தகவல்கள் வெளியானது. இது தவிர தேசிய அரசியலில் கட்சிகளின் நிலைப்பாட்டிலும் மாறுதல்கள் ஏற்பட்டது.
3-வது அணியில் இருந்து விலகிய முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி, காங்கிரசுடன் "கை'' கோர்த்தது. இதையடுத்து 3-வது அணியில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, சந்திர சேகர்ராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி, தேவேகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் சேர்ந்தன.இடது சாரிகளும் ஆதரவு கரம் நீட்டி இருப்பதால் 3-வது அணி தேசிய அளவில் வலுவானதாக மாறி உள்ளது. இந்த மாற்றம் காரணமாக ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக 260 எம்.பி.க்களும், எதிராக 268 எம்.பி.க்களும் இருப்பது உறுதியாகி உள்ளது.
சிறிய கட்சிகள், சுயேட்சைகள் தெரிவித்து வரும் கருத்துக்களின் அடிப்படையில் கணக்கிட்டால் மத்திய அரசுக்கு 268 எம்.பி.க்கள் ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் அரசுக்கு எதிராக 270 எம்.பி.க்கள் உள்ளனர். எனவே மத்திய அரசு வெற்றி பெறுமா, தோல்வி அடையுமா என்பது கணிக்க முடியாதபடி உள்ளது.
தொடர்ந்து சிக்கல் நீடிப்பதால் சில எம்.பி.க்களை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருக்கச் செய்யும் கடைசி ஆயுதத்தை காங்கிரஸ் தலைவர்கள் கையில் எடுத்துள்ளனர். 10 முதல் 15 எம்.பி.க்களை வரவிடாமல் செய்ய முயற்சிகள் நடப்பதாகவும். பா.ஜ.க., சிவசேனாவில் உள்ள எம்.பி.க்கள் பணத்துக்காக கடைசி நிமிடத்தில் விலை போய் விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
பரபரப்பான இத்தகைய சூழ்நிலையில் பாராளுமன்றத்தின் 2 நாள்சிறப்புக் கூட்டம் இன்று தொடங்கியது. முக்கிய தலைவர்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும் 7 புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர். அதன் பிறகு கடந்த கூட்டத் தொடருக்கு பின்னர் மறைந்த 5 முன்னாள் எம்.பி.க்களுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. வழக்கமாக இத்தகைய தீர்மானத்துக்கு பிறகு கேள்வி நேரம் நடைபெறும். ஆனால் இன்று கேள்வி நேரம் எதுவும் இல்லை.
சபாநாயகர் சோம்நாத்சட்டர்ஜி உத்தரவுப்படி நேரடியாக நம்பிக்கைத்தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. "அமைச்சரவையின் மீது இந்த சபை நம்பிக்கை வைத்துள்ளது'' என்ற ஒற்றை வரி நம்பிக்கைத் தீர்மானத்தை பிரதமர் மன்மோகன்சிங் தாக்கல் செய்தார்.
இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்படும் என்று கூறிய சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி ஒவ்வொரு கட்சிக்கும் பேச அளிக்கப்படும் வாய்ப்புகள் குறித்து கூறினார்.
விவாதத்தை பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கி வைத்து முதலில் பேசினார். ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு கடந்த 4 ஆண்டுகளில் செய்துள்ள சாதனைகளை அவர்பட்டியலிட்டார். அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவுக்கு ஏன் தேவை என்பதை பற்றியும், அவர் விளக்கம் அளித்தார். தொடர்ந்து விவாதம் நடந்தது.
நாளை (செவ்வாய்க் கிழமை)யும் அரசியல் கட்சித் தலைவர்கள் விவாதத்தில் பங்கேற்று பேசுவார்கள். முடிவில் பிரதமர் மன்மோகன்சிங் பதில் அளித்து பேசுவார். நாளை பிற்பகல் நம்பிக்கைத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும்.
எம்.பி.க்கள் தங்கள் இருக்கை முன் உள்ள பொத்தானை அழுத்தி வாக்கை பதிவு செய்வார்கள். அதில் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் சீட்டு மூலம் வாக்கெடுப்பு தொடரும். சில மணி நேரங்களுக்குள் வாக்கெடுப்பு முடிவு தெரிந்து விடும். மத்திய அரசு தலைவிதி நாளை இரவு தெரிந்து விடும்