கிழக்கு மாகாணத்துக்கு 1226 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் நோக்கில் 1226 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இவர்களில் 1097 பேர் தமிழ் மெழிமூலமும் 129 பேர் சிங்கள மொழிமூலமும் கல்வி போதிப்பர். இவர்கள் அனைவரும் நியமனம் பெறும் பாடசாலைகளில் தொடர்ந்து 10 வருடகாலம் சேவை புரிய வேண்டும் எனவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

மக்கள் வங்கியின் தலைமையகத்தில் இன்று காலை நடைபெற்ற வைபவமொன்றில் மட்டக்களப்பு, அம்பாறை மட்டும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களில் சிலருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமனக் கடிதங்களை கையளித்தார். இது தொடர்பான வைபவத்தில் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மற்றும் மக்கள் வங்கித் தலைவர் டபிள்யூ. கருணஜீவ, ஆகியோர் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.ஏனைய ஆசிரியர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி திருகோணமலை சிங்கள மகா வித்தியாலயத்திலும் எதிர்வரும் 28 ஆம் திகதி அம்பாறை டி.எஸ். சேனாநாயக்க மகாவித்தியாலயத்திலும் வழங்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

கிழக்கு மாகாண இளைஞா; யுவதிகள் 500 பேருக்கு கொரியாவில் வேலை வாய்ப்பு
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தகவல்

பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர் யுவதிகள் 500 பேருக்கு கொரியாவுக்கான வேலை வாய்ப்புக்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளரும்; அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் செயலாளர் இன்று காலை என்னைச் சந்தித்தபோது கிழக்கு மாகாண சபைக்கு உட்பட்ட இளைஞர்களுக்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். இதனையடுத்தே அப்பிரதேச மக்களுக்காக 500 வேலை வாய்ப்புக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்புக்கான தெரிவு செய்யப்படுபவர்களுக்கு கொரிய மொழிப் பயிற்சி வழங்கப்படும். கிழக்கில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் இப்பயிற்சிக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.சுகாதரா அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றின் மூலமும் கிழக்கு மாகாண மக்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.