நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் கூட்டணிக்கு வெறறி் வாய்ப்பு
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் பிரச்சினை காரணமாக பெரும் பான்மை பலத்தை இழந்த மத்திய அரசு பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என்றது. இதற்கான 2 நாள் பாராளுமன்ற சிறப்புக் கூட்டம் நேற்று தொடங்கியது. அமைச்சரவை மீது நம்பிக்கை உள்ளது என்ற ஒரு வரி தீர்மானத்தை பிரதமர் மன்மோகன் சிங் கொண்டு வந்தார்.இந்த தீர்மானம் மீது நேற்று காரசார விவாதம் நடந்தது. இன்று 2-வது நாள் விவாதம் நடந்து வருகிறது. இன்று மாலை விவாதத்துக்குப் பதில் அளித்து பிரதமர் மன் மோகன்சிங் பேசுவார். அதன் பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும். பாராளுமன்றத்தில் தற்போது 541 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் 271 எம்.பி.க்களின் ஆதரவு கிடைத்தாலே போதும் மத்திய அரசு வெற்றி பெற்றுவிடும்.
இன்று மதியம் வரையிலான நிலவரப்படி ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கு 269 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. அரசுக்கு எதி ராக 267 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.
2 சுயேச்சைகள் மற்றும் மிசோரம்,நாகலாந்து மாநிலங்களை சேர்ந்த 2 எம்.பி.க்கள் ஆக மொத்தம் 4 பேர் இன்று காலை வரை தங்கள் முடிவை அறிவிக்கவில்லை. இவர்கள் 2 பேர் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில் காங்கிரஸ் அரசு 271 என்ற மேஜிக் நம்பரை எட்டி விடும்.
அரசுக்கு எதிராக வாக்களிக்க உள்ள எம்.பி.க்கள் எண்ணிகையும் மிக, மிக பலம் பொருந்தியதாக உள்ளதால், கடைசி நிமிட பரபரப்பில் பாதகமாக எதுவும் நடந்து விடக்கூடாது என்று காங்கிரஸ் தலைவர்கள் உஷாராக உள்ளனர்.
சமாஜ் வாடியில் உள்ள எந்த எம்.பி.யாவதோ அல்லது காங்கிரசில் உள்ள மூன்று அதிருப்தி எம்.பி.க்கள் திடீரென போர்க் கொடி தூக்கி விட்டாலோ, பிரச்சினையை சமாளிக்க வேண்டுமே என்று புதிய வியூகம் ஒன்றை வகுத்துள்ளனர். அதன்படி எதிரணியில் உள்ள 10 அல்லது 15 எம்.பி.க்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
நேற்று பாராளுமன்ற கூட்டத்தில் 10 பா.ஜ.க. எம்.பி.க்கள் கலந்து கொள்ளவில்லை. இது பா.ஜ.க. தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சிவசேனா, அகாலி தளம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் பாராளுமன்றத்தை புறக்கணிக்கும் முடிவில் இருப்பதாக தெரிகிறது.
காங்கிரசுக்கு சாதகமாக புறக்கணிப்பு நாடகம் நடத்த தயாராகிவிட்ட 4 பா.ஜ.க. எம்.பி.க்கள் யார்-யார் என்ற விபரம் தெரியவந்துள்ளது. அவர்கள் 4 பேரும் கர்நாடகாவை சேர்ந்த மனோரமா மாதவராஜ், பசவனா கவுடா பட்டீல், சங்லியானா, மஞ்சுநாத் சன்னூர் எனறு தெரிய வந்துள்ளது. பிரிஜ்புரன் சரண்சிங் (உ.பி.) கோம்பாய் படேல் (குஜராத்) ஆகிய 2 பா.ஜ.க. எம்.பி.க்களும் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.
இவர்கள் தவிர பா.ஜ.க. எம்.பி.க்கள் சுக்தேவ் பஸ் வான், லட்சுமண்சிங், ஹரீஸ் சந்திரா ஆகிய 3 பேர் வாக்களிக்க வருவார்களா என்பதில் நிச்சயமற்ற நிலை நிலவுவதை பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். மொத்தத்தில் 9 பா.ஜ.க. எம்.பி.க்களின் வாக்குகள் மத்திய அரசுக்கு சாதகமாக போய் விடும் சூழ்நிலை உள்ளது.
இவர்கள் தவிர 3 அகாலி தளம் எம்.பி.க்கள் வாக்கெடுப்பை புறக்கணிப்பார்கள். அல்லது அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள். சிவசேனாவை சேர்ந்த 3 எம்.பி.க்களும் இதே மன நிலையில் தான் உள்ளனர். பர்பானி தொகுதி சிவசேனா எம்.பி. மத்திய அரசை ஆதரித்து வாக்களிக்கப் போவதாக வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
இதற்கிடையே ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த ராம்சுவரூப் பிரசாத் (நாலந்தா), பி.பி.கோயா (லட்சத்தீவு) ஆகிய 2 எம்.பி.க் கள் மத்திய அரசை ஆதரிக்கப்போவதாக கூறி உள்ளனர். இதன் மூலம் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து குறைந்த பட்சம் 14 எம்.பி.க்கள் (பா.ஜ.க.-6, அகாலி தளம்-3, சிவ சேனா-3, ஐக்கிய ஜனதா தளம்-2=14) மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளனர்.
தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சித்தூர் தொகுதி எம்.பி. ஆதிகேசவலு இன்று காலை திடீர் `பல்டி' அடித்தார். மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார். இதனால் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சியில் இடிந்து போய் இருக்கிறார். இந்த ஆதி கேசவலு எம்.பி. தான் 1993-ம் ஆண்டு நரசிம்மராவ் ஆட்சியைக் காப்பாற்ற ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
தெலுங்கு தேசம் எம்.பி. ஆதிகேசவலுவையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ள எம்.பி.க்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 15 எதிரணி எம்.பி.க்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக சமாஜ்வாடி கட்சி தெரிவித்தது. இதனால் எதிர்க்கட்சி தலைவர்கள் நிலை குலைந்து போய் உள்ளனர்.
புறக்கணிப்பாளர்களை நம்பி உள்ள காங்கிரஸ் தலைவர்கள் அதற்கு பெரிய விலை கொடுத்து இருப்பதாக டெல்லியில் பரபரப்பாக பேசப்படுகிறது. அந்த நம்பிக்கையில் தான் கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் மத்திய அரசு வெற்றிபெறும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறி வருகிறார்கள். தற்போதைய சூழ் நிலையில் எதிர்பாளர்களை விட மத்திய அரசின் "கை'யே ஓங்கி உள்ளது.
திட்டமிட்டப்படி 10 எம்.பி.க்கள் புறக்கணிப்பு செய்தாலோ, அல்லது ஆதரித்து வாக்களித்தாலோ, மத்திய அரசு எளிதாக வெற்றி பெற்றுவிடும். காங்கிரசுக்கு சாதகமான இந்த சூழ்நிலையை மாற்ற பா.ஜ.க., இடதுசாரிகள், 3-வது அணி தலைவர்கள் நேற்றிரவு முதல் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த 7 எதிர்ப்பாளர்களை குறி வைத்து மாயாவதி காய்களை நகர்த்தி உள்ளார். அது போல காங்கிரசில் உள்ள 3 அதிருப்தி எம்.பி.க்களுக்கும் குறி வைக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் அதிருப்தி எம்.பி.க்கள் கடந்த 2 நாட் களுக்கு முன்பு வரை ஊசலாட்டத்தில் இருந்தனர். தற்போது அவர்கள் அமைதியாகி விட்டனர்.
எனவே எதிர்க்கட்சிகள் எதிர்பார்ப்பது போல கடைசி நிமிடத்தில் இவர்கள் மாறுவார்களா என்று சொல்ல இயலாது. மத்திய அரசை தோற்கடிக்க இயலாது என்ற கருத்து பா.ஜ.க. வில் ஒரு பிரிவினரிடம் ஏற்பட்டுள்ளது. இதனால் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் இன்று சற்று சோர்வாக காணப்பட்டனர். அரசுக்கு ஆதரவாகவும், எதிராகவும் இருப்போர் எத்தனை பேர் என்பது மிகதெளிவாக இல்லை. எனவே இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் போது எதுவும் நடக்கலாம்.
ஆனால் "இறுதி வெற்றி'' யாருக்கு என்று பார்த்தால், "புறக்கணிப்பாளர்கள்'' புண் ணியத்தில் மத்திய அரசு ஜெயிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது. இவ்வாறு தகவல்கள் வெளியாகியுள்ளன.