
இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்ட அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை முழு உலகுக்கும் தெரிவிப்பதற்கும் முழு உலகையும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கி வரும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் சார்க் மாநாடு நல்லதொரு சந்தர்ப்பமாக அமையுமென வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இம்மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சார்க் உச்சி மாநாடு தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். பொலிஸ் மாஅதிபர் விக்கிரமரத்ன மற்றும் கொழும்பு மாநகர மேயர் ஆகியோரும் கலந்துகொண்ட இந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மேலும் கூறுகையில், சார்க் அமைப்பானது எமது மக்கள் ஒத்துழைப்பு அமைப்பாகட்டும்" எனும் தொனிப் பொருளில் இலங்கையில் நடைபெறவுள்ள 15ஆவது சார்க் மாநாடு பிராந்திய நாடுகளுடன் அந்நியோன்ய உறவுகளை வளர்க்க பெரிதும் வழி வகுக்கும்.
சார்க் மாநாடு இம்முறை இலங்கையில் நடைபெறுவதன் மூலம் எமது நாட்டுக்குக் கிடைக்கும் தலைமைத்துவமானது அரசாங்கத்துக்குக் கிடைத்த வெற்றியாகும். இதன் மூலம் உலகளவிலான நேரடித் தொடர்புகளுக்கு வழியேற்படும். சார்க் அமைப்பின் தலைவர் என்ற வகையில் சர்வதேச நாடுகளின் முக்கிய தலைவர்கள் எமது ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்வதற்கும் வாய்ப்புக்ள் ஏற்படும். இம்முறை சார்க் மாநாட்டில் பிராந்திய நாடுகளின் பொருளாதாரம், பாதுகாப்பு, உல்லாசப் பயணத்துறை, நாடுகளுக்கிடையிலான நட்புறவு மற்றும் தொழில் வாய்ப்புப் பறிமாற்றங்கள் போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளன.
சார்க் பிராந்தியத்தின் உணவுப் பிரச்சினை, எரிபொருள் மற்றும் மின் உற்பத்தி என்பன தொடர்பாக பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதுடன் தொழில்நுட்ப சுகாதார சேவை மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தங்களும் இம்மாநாட்டில் கைச்சாத்திடப்படவுள்ளன.
சார்க் அமைப்பு உலகில் 24 சதவீதமான மக்கள் தொகையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பலமான அமைப்பாகும். இதன்காரணமாக இங்கு நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் உலகளவில் முக்கியத்துவத்தைப் பெறுகிறன. சார்க் நாடுகளுக்கிடையில் ஒரு பொது நாணயத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பாகவும் இம்முறை கவனம் செலுத்தப்படவுள்ளது என்றும் அமைச்சர் மேலும்; தெரிவித்தார்.

கடல் வழியாக புலிகள் தப்பிச் செல்வதைத் தடுக்க விசேட ஏற்பாடு கடற்படைப் பேச்சாளர் அறிவிப்பு
வடக்கில் தோழ்வியடைந்து வரும் புலிகள் கடல் வழியாக தப்பிச் செல்வதைத் தடுப்பதற்கும் அவர்களுக்கான விநியோகங்களைத் துண்டிப்பதற்கும் ஏற்ற வகையில் வட பகுதி கடற்பரப்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் கடற்படையினரால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி. கே. பி. தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக் காலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கடற்படைப் பேச்சாளர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
மன்னாருக்கும் நெடுந்தீவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த விசேட கடல் பாதுகாப்புத் திட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கடற்படைப் படகுகள் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் வருவதும் அவர்களைப் போன்று புலிகள் தப்பிச் செல்வதும் புலிகளுக்குத் தேவையான விநியோக நடவடிக்கைகள் இடம்பெறுவதும் மிக நீண்ட காலப் பிரச்சினைகளாகும். இவற்றைக் கட்டுப்படுத்தவே இப்புதிய கடற்பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் பலனாக இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் பிரவேசிப்பது தடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2ஆம் திகதி இந்தப் பிரதேசத்திற்குள் வர முயற்சித்த சுமார் 289 இந்திய மீனவர்கள் சோதனையிடப்பட்ட பின்னர் திருப்பியனுப்பப்பட்டனர். இதன் பின்னரே இப்புதிய கடல் பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்