சபாநாயகர் முன் பணத்தைக் கொட்டிய பாரதீய ஜனதா எம்பி.கள்; பாராளுமன்றத்தில் பரபரப்பு;

மன்மோகன் சிங் அவர்களின் தலைமையிலான அரசின் மீதான நமபிக்கை வாக்கெடுப்பு விவாதம் லோக்சபாவில் நடந்து கொண்டிருந்தபோது, பா.ஜ., எம்,பி.,கள் சபாநாயகர் முன்பாக பணக்கட்டுகளைக் கொட்டியதால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது. எதிர்கட்சியினரை தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு கோரி, சமஜ்வாடி கட்சியினர் கொடுத்ததாக பாரதிய ஜனதா கட்சியினர், பணக் கட்டுகளை சபாநாயகர் முன்பாக சபையில் கொட்டியபோது பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவை ஒத்தி வைக்கப்பட்டது. பா.ஜ.,வினரின் இந்த குற்றச்சாட்டு குறித்து பரிசீலிப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.

அரசை ஆதரிக்குமாறு கோரி 3 பா.ஜ., எம்பி.களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக எதிர்கட்சித் தலைவர் அத்வானி குற்றம் சாட்டினார். சமாஜ்வாடி கட்சி சார்பில் பணம் வழங்கப்படதாக பா.ஜ., தெரிவித்தது.

லஞ்சப் பணத்தை கொடுப்பதற்காக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் எங்களது எம்.பி.க்களை அணுகியதற்கு ஆதாரம் உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் கூறுகையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் எங்கள் கட்சி எம்.பி.க்களையும் ஆதரவுக்காக அணுகினார்கள். லஞ்சம் கொடுக்க முன்வந்தனர். அவர்கள் எந்த திகதியில், எங்கு வந்தார்கள் என்பன போன்ற ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது, என்றார். இருந்தும் ஆதாரங்கள் எதனையும் அவர்களால் முன்வைக்கமுடியவில்லை. எங்கள் கட்சிக்காரர்கள் யாரும் விலைபோக மாட்டார்கள் என்றும் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெறும் என்ற அச்சத்தால் எதிர்கட்சியினர் செய்த சதியின் ஒரு பகுதியே இந்த பணக்கட்டு விவகாரம் என்று காங்கிரஸ் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.