இலங்கையில் பதற்றமான சூழ்நிலை தொடர்வதால் தமிழகம் வர ஏராளமான தமிழர்கள் படகுக்காக காத்திருப்பதாக ராமேஸ்வரம் வந்த அகதி கூறினார். இலங்கை வவுனியாவை சேர்ந்த 14 அகதிகள் நேற்று ராமேஸ்வரம் வந்தனர். நேற்று முன்தினம் மாலை நான்கு மணிக்கு பேசாலை கடற்கரையிலிருந்து படகில் புறப்பட்ட இவர்கள் இரவு 10 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையில் வந்திறங்கினர். தனுஷ்கோடி போலீஸ் ஸ்டேஷன் வந்த அகதிகளை போலீசார் விசாரணை செய்து மண்டபம் முகாம் அனுப்பி வைத்தனர். அகதி தர்மலிங்கம் கூறுகையில், இலங்கையில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் தமிழர்கள் அதிகளவில் இங்கு அகதியாக வருவதற்கு திட்டமிட்டுள்ளனர். நாங்கள் வவுனியாவிலிருந்து புறப்பட்டு பேசாலை வந்தோம். தலா ரூ. 10 ஆயிரம் கொடுத்து படகில் வந்தோம். வழியில் இலங்கை கடற்படை கப்பல்கள் ரோந்து சென்றன. கடற்படையினரின் கண்களில் படாமல் படகோட்டிகள் எங்களை தனுஷ்கோடியில் இறக்கிவிட்டனர். இங்கு அகதியாக வருவதற்கு படகு கிடைக்காமல் ஏராளமான தமிழர்கள் பேசாளையில் காத்திருக்கின்றனர்' என்றார்.