யூலைக்கலவரத்தினை நினைவு கூர்வதன்மூலம் தமது பாஸிஸ அடக்கு முறைக்கு பரிகாரம் தேட முற்படும் புலிகள்

யூலைக் கலவரமா அல்லது ஐக்கிய தேசியக் கட்சியினரால் அரங்கேற்றப்பட்ட ஆறாவது இனக்கலவரமா? இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சியினரால் நடாத்தப்பட்ட 6 வது இனக்கலவரமான ஆடிக்கலவரத்தின் நினைவு தினம் இன்று. அக்கலவரம் யூலைக் கலவரம் என பெயரிடப்பட்டுள்ளது. ஐ.தே.கட்சியினரால் நடத்தப்பட்ட 6 வது இனக்கலவரம் என்பதற்கான சான்றுகள் என்ன?

யூலைக் கலவரததினை நினைவுகூர்வதன்மூலம் தமது பாஸிஸ அடக்கு முறைக்கு பரிகாரம் தேட முற்படும் புலி நாட்டின் தலைவர்களையே தமது பசிக்கு இரையாக்கியமையை மூடிமறைக்க முற்படுகின்றார்களா?

>

1 இலங்கைத்தீவில் 1797 ம் ஆண்டு காலடிபதித்த ஆங்கிலேயர்கள் 1815 ம் ஆண்டு கண்டி ராஜதானியைக் கைப்பற்றியதற்கமைய இலங்கை முழுவதையும் தமது ஆட்சியின்கீழ் கொண்டுவந்தனர். அத்தினத்தின் 100வது ஆண்டினை நினைவுகூரும் முகமாகவும் பிரித்தானியரின் ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்குமுகமாகவுமே 1915 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலரின் வழிகாட்டலுக்கமைய பெளத்த மதகுருமாரின் தலைமையில் கண்டியில் ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டது. அந்நிகழ்வின்போதே கம்பளையில் அமைந்துள்ள முஸ்லிம்களின் பள்ளிவாசலுக்கு முன்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூக்குரலிட்டமையால் கலவரம் ஏற்பட்டது. அவ்வூர்வலம் தமது ஆட்சியமைப்பிற்கு எதிரான ஊர்வலம் என்பதனை அறிந்த பிரித்தானிய அரசாங்கம் கலவரத்தினை பொலிஸாரின் துணைகொண்டு அடக்கியதுடன் ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தர்கள் நால்வரையும் கைதுசெய்தது. அவர்களில் திரு டி.எஸ் சேனநாயக்கா அவர்களும் அடங்குவர்.

2 1956 யூன் மாதம் 5 ந் திகதி காலிமுகத்திடலில் தனிச்சிங்கள சட்டமூலத்தினை ஆட்சேபித்து தமிழரசுக் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தினை வன்முறையினை மேற்கொண்டதன்மூலம் கலைந்துசெல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள் ஐ.தே.கட்சியினர் என்பது விசாரணைகளின்மூலம் வெளியான அறிக்கையாகும்.

3 தனிச்சிங்களச் சட்டமூலம் அறிமுகப்படுத்தியமைக்கான அடிப்படைக் காரணிகள் என்ன? அச்சட்டமூலம் தமிழ்மக்களை பாதிக்காதவாறு திரு எஸ..டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கா அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட மாற்று நடவடிக்கை என்ன? அன்றைய சனத்தொகைப் புள்ளிவிபரங்களுக்கமைய 69 வீதமான சிங்கள மக்கள் வாழ்ந்த இலங்கைத்தீவில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக அரசோச்சியது. அதனை அகற்றி சுயபா\ாவினை அதாவது சுதேசிய மொழியினை நிர்வாக மொழியாக்குவதன் அடிப்படையிலேயே சிங்கள மொழி, ஆட்சி மொழியாக அங்கீகரிக்கப்பட்டது. இந்நிலையில் மொழி அமுலாக்கலினால் தமிழ் மக்கள் பாதிப்படையாதவாறு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையே வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்ததான சம\டி அமைப்பு முறையினை தமிழ் மக்களுக்கு வழங்குவதற்கான 1957 யூலை 27 ந் திகதி உருவாக்கப்பட்ட பண்டா –செல்வா உடன்படிக்கையாகும்.

மேற்படி உடன்படிக்கையினை அமுல்படுத்தவிடாது தடுத்தவர்கள் யார்? மேற்படி உடன்படிக்கையினை அமுல்படுத்துவதன்மூலம் தமிழர்களுக்கு பண்டாரநாயக்கா தனி நாடு ஒன்றினை வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாரென தெற்கில் பிரச்சாரங்களை முடுக்கிவிட்ட ஐ.தே.கட்சியினர் உடன்படிக்கையை கிழித்தெறியுமாறு கோரிக்கையினை முன்வைத்து 1957 அக்டோபர் 4 ந் திகதி பெளத்த மக்களின் அதி உயர் வணக்கஸ்தலமான கண்டி தலதா மாளிகைக்கு ஜே.ஆரின் தலைமையில் பாதயாத்திரை ஒன்றினை மேற்கொண்டனர். இப்பாதயாத்திரை ஊறுகொடவத்தை என்னும் இடத்தில்வைத்து பொலிஸாரினால் தடுத்து நிறத்தப்பட்டு பாதயாத்திரையில் பங்கு கொண்ட அனைவரும் கொழும்பிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இந்நிலையில் அரசாங்கத்தில் அங்கம்வகித்த சில தீவிரவாத சிந்தனையாளர்களான விமலா விஜயவர்தனா போன்றவரின் தலைமையில் பண்டாரநாயக்காவின் வாசஸ்தலமான அலரி மாளிகைக்கு ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றினை மேற்கொண்ட குழுவினரின் நடவடிக்கை காரணமாக பண்டா –செல்வா உடன்படிக்கை கிளித்தெறியப்பட்டது. இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திய ஐ.தே.கட்சியினர் நாடு தழுவியரீதியான இனக்கலவரம் ஒன்றினை மே மாதம் 26 ந் திகதி கட்டவிழ்த்துவிட்டனர். இக்கலவரம் மூன்று நாட்கள் தொடர்ந்தது. இறுதியில் தமிழ் மக்களுக்கான உரிமையினை வழங்க முற்பட்ட பண்டாரநாயக்காவின் உயிர் 1959 செப்டம்பர் 25 ந் திகதி பறிக்கப்பட்டது.

4 1974 ம் ஆண்டு சிறீமாவோ பண்டாரநாயக்கா அவர்களின் தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சியினரின் ஆட்சிக் காலத்தின்போது யாழ்ப்பாணத்தில் 6 வது உலகத் தமிழாராய்ச்சி மகாநாடு நடாத்தப்பட்டது. ஜனவரி மாதம் 3 ந் திகதி முதல் 10 ந் திகதி வரை இடம்பெற்ற மகாநாட்டின் இறுதி நாளன்று அங்கு 9 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இக்கொலைகளுக்கு கடமையில் ஈடபட்டிருந்த சிங்களப் பொலிஸாரே காரணமென பிரச்சாரங்கள் அன்றும், இன்றும் தமிழர்கள் சிலரால் மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால் அப்படுகொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட குழுவினரின் அறிக்கைகளுக்கமைய மின் கம்பம் இரண்டு வெட்டி வீழ்த்தப்பட்டமையால் மின் தாக்கத்தினால் அவர்கள் பலியானமை உறுதிசெய்யப்பட்டது. மின்கம்பத்தினை வெட்டி வீழ்த்தியவர்கள் யார்? ஆயுதக்குழுக்களிடையே இடம்பெற்ற முரண்பாடு காரணமாக வெளியாகிய உண்மையின் அடிப்படையில் அப்பணியினை மேற்கொண்டவர் சிவகுமாரன் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

5 1977 ஆகஸ்ட் இனக்கலவரம். 1977ம் ஆண்டு யூலை மாதம் 21 ந் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றிய ஐக்கிய தேசியக் கட்சியினரால் ஒரு மாதகால இடைவெளியில் மேற்கொள்ளப்பட்ட இனக்கலவரமே ஆகஸ்ட் இனக்கலவரம். 1977 ஆகஸ்ட் மாதம் 16 ந் திகதி யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் இடம்பெற்ற களியாட்ட (Carnival) விழாவின்போது ஆயுததாரிகளால் பொலிஸார் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதன் எதிரொலியாக நாடுதழுவியரீதியில் பரப்பப்பட்ட பொய்ப்பிரச்சாரங்களுக்கமையவே அக்கலவரம் அநுராதபுர புகையிரத நிலையத்தில் பயணிகள்மீது ஆரம்பிக்கப்பட்டு அரசின் அனுசரணையுடன் நாடுதழுவியரீதில் கட்டவிழ்த்து விடப்பட்டது.
6 யூலைக் கலவரம் என்பது (25-07-1987) இலங்கைத் தமிழ் மக்கள் எவராலும் என்றுமே மறக்கமுடியாத கொடிய வன்முறையின் ஞாபகார்த்த தினமாகும். அன்றைய ஆட்சியாளர்களான ஐ.தே.கட்சி அரசாங்கத்தினதும் அரசில் அங்கம்வகித்த அமைச்சர்கள் சிலரினாலும் திட்டமிட்டு நடாத்தப்பட்ட வன்முறை என்பதனை கலவரம்பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட அறிவியலாளர்களின் அறிக்கைகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது. வடமாகாணத்தின் திருநெல்வேலி என்னும் இடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் என்னும் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலின் விளைவாக 13 ராணுவத்தினர் கொல்லப்பட்டமைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே மேற்படி கலவரம் தெற்கில் கட்டவிழ்த்துவிடப்பட்டது. ஆயுதக்குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத நடவடிக்கையினால் 13 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டமைக்கு பதிலடியாக மக்களின் பாதுகாவலர்களாக செயற்படவேண்டிய அரசாங்கம் தானும் பல பயங்கரவாதிகளை உள்ளடக்கிய அரசாங்கத்தினையும் ஆட்சி அமைப்பு முறைமையையும் கொண்ட அரசு என்பதனை தனது வன்முறையின்மூலம் சர்வதேச சமூகத்திற்கு வெளிக்காட்டியது.

அதற்கமைய அரசாங்கத்தில் அங்கம் வகித்த சில அமைச்சர்களினால் வழங்கப்பட்ட ஆலோசனைகளுக்கும், அறிவுறுத்தல்களுக்கும் அமைய அரச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு தமிழ் மக்களின் வர்த்தக நிலையங்கள், வதிவிடங்கள்போன்றவை அடையாளங்காணப்பட்டதற்கமைய அவைகள் சூறையாடப்பட்ட பின்னர் தீயிட்டு நாசமாக்கப்பட்டன. சொத்துக்களும், உடமைகளும் சூறையாடப்பட்டதுடன் திருப்திகொள்ளாத ஐ.தே கட்சியின் ஆதரவு காடையர்கூட்டம் தமிழர்களான அப்பாவிகளைத் தேடி திட்டமிட்டு தமது கொலைவெறியினை அரங்கேற்றினர். நகரங்களிலே வாழ்ந்த மக்களை மட்டுமன்றி அரசின் கண்காணிப்பிலும், கட்டுப்பாட்டிலும் சிறைவைக்கப்பட்டிருந்த தமிழர்கள் 53 பேர் இருநாட்களில் யூலை (25, 27) சிறைக் காவலர்களின் அனுசரணையுடன் கத்திகளாலும், பொல்லுகளாலும் வெட்டியும், கொத்தியும் கொல்லப்பட்டனர்.25 ந் திகதி இடம்பெற்ற வன்முறையின்போது 28 பேர் கொல்லப்பட்ட நிலையிலும் எஞ்சியவர்களைப் பாதுகாப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள முன்வராமையால் முதலாவது படுகொலைகள் நடாத்தப்பட்டு இரு நாட்களின் பின்னர் ஏனைய 25 பேர் கொல்லப்பட்டமை இப்படுகொலைகளில் அரசாங்கத்தின் அனுசரணை வழங்கப்பட்டமை நிரூபணமாகியது.

யூலைக்கலவரத்தின்போது 471 தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் 8.077 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு, 3.835 கொள்சைச் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டு 3.769 மரணமடையாத அளவிற்கான தமிழ் மக்கள்மீதான தாக்குதல் சம்பவங்களும் 6.000 மில்லியன் ரூபாவிற்குமேலான தமிழ் மக்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டும், நாசமாக்கப்பட்டதுடன் 400.000 மக்கள் தமது இல்லங்களைவிட்டு வெளியேறி வடக்கு கிழக்கு மாகாணங்களில் தஞ்சமடைந்ததாக கலவரம் தொடர்பான அறிக்கைகள் வெளியாகின. இக்கலவரத்தின் காரணகர்த்தாக்கள் யார்? பாஸிஸப் புலிகளின் நேசமிகு நண்பர்களான ஐக்கிய தேசியக் கட்சியினரே! ஜனநாயக முகமூடியணிந்த மேற்படி பயங்கரவாதிகளை இன்று ஆட்சிபீடத்தில் மீண்டும் அமரவைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் யார்? யூலைக் கலவரத்தினை தமிழ் மக்களின் பெயரால் தமக்கு சாதகமாக பயன்படுத்துவதன்மூலம் ஐ.தே.கட்சியினரை ஆட்சிபீடத்தில் அமர்த்தி மூச்சுத்திணறிக் கொண்டிருக்கும் சர்வதேசப் பயங்கரவாதியான பிரபாகரனுக்கு ஒக்ஸிஸன் வழங்குவதற்கு புலிக்கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தனும் பிரபாகரனின் ஏனைய அடிவருடிகளும் முயல்கின்றார்.

ஆனால் கலவரம் இடம்பெற்று இன்றுடன் ( 1983—2008) 25 வருடங்கள் நகர்ந்துவிட்டன இந்த 25 வருடங்களில் நாட்டில் இடம்பெற்ற சம்பவங்களும், மாற்றங்களுமென்ன? யூலைக்கலவரத்தின்போது கொல்லப்பட்ட 471 தமிழ்மக்களினதும், இழந்துவிட்ட 6.000 மில்லியன் சொத்துக்களினதும் இழப்பிற்காக நாம் இன்றைய தினத்தினை நினைவுகூருவது எந்தவகையில் பொருத்தமானது என்பதே இன்றைய வினாவாகும்?

பிரபாகரன் தலைமையிலான பயங்கரவாதிகளால் இன்றுவரை படுகொலைசெய்யப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தினையும் பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை 25 ஆயிரத்தினையும் தாண்டிவிட்டது. சிங்கள ராணுவத்தினராலும், ஐ.தே.கட்சி ஆதரவு காடையர்களாலும் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையினைவிட10 மடங்கு அதிகமான உயிர்களை பலிகொண்ட நிலையில் யூலைக்கலவரத்தினை நினைவு கூர்வதற்கான பாஸிஸப் புலிகளுக்கு உள்ள தகைமை என்ன?

ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆட்சிபீடத்திலிருந்து அகற்றப்பட்டதன் பின்னர் 1994 ஆகஸ்ட் 17 இன்றுவரை இனக்கலவரம் ஒன்று இடம்பெறாதிருப்பதற்கான காரணிகள் என்ன? முல்லைத்தீவு, கிளிநொச்சி, ஆனையிறவு போன்ற ராணுவமுகாங்கள்மீது பாஸிஸப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களின்மூலம் பல்லாயிரம் பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டபோதும் ஒரு இனக்கலவரம்கூட இடம்பெறவில்லை ஏன்? வாசகர்களே தீர்மானியுங்கள் தமிழ் மக்களின் உண்மையான எதிரிகள் பிரபாகரன் தலைமையிலான பாஸிஸப் புலிகளும் அதன் ஆதரவு ஐக்கிய தேசியக் கட்சியினரும் என்பதற்கு இன்னுமா ஆதாரங்கள் தேவை? நன்றியடன் --குமாரதுரை