

புலிப்பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டின்கீழ் கடந்த 19 ஆண்டுகாலமாக அராஜக ஆட்சி நடைபெற்ற மடு மாதா தேவாலயமும் அதனை அண்டிய பிரதேசமும் கடந்த ஏப்ரல் 25 ந் திகதி ராணுவத்தினரால் முழுமையாக விடுவிக்கப்பட்டது. இச்சம்பவம் இடம்பெறுவதற்கு இரண்டு நாட்களின்முன்னர் மாதாவின் திருவுருவச் சிலையினை பயங்கரவாதிகள் திருடிச்சென்று தேவன்பிட்டி என்னும் இடத்திலுள்ள சிறிய ஒரு தேவாலயத்தினுள் மறைத்து வைத்தனர். அதனைத் தொடாந்து ராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட வடக்கை மீட்கும் நடவடிக்கைக்கமைய கடந்த வாரம் தேவன்பிட்டியை அண்டிய பிரதேசம் ராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் மாதாவின் திருவுருவச் சிலை நேற்று முன்தினம் ஓமந்தை சோதனைச் சாவடியூடாக ராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் கொண்டுவரப்பட்டு அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மடுமாதா தேவாலயத்தினை முழுமையாக புனருத்தாரணம் செய்வதற்கென அரசாங்கத்தால் 1.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு பணிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதற்கமைய எதிர்வரும் வருடாந்த உற்சவத்தின்போது மாதாவின் திருவுருவச் சிலை மீண்டும் ஆலயத்தில் வைக்கப்பட்டு விழாக்கள் வழமைபோல் இடம்பெறுமென அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.