வறுமை ஒழிப்பை வலியுறுத்தி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆங்கில பாடல் ஆல்பம் ஒன்றை நேற்று வெளியிட்டார். பிரே பார் மி பிரதர்' என்ற இந்த பாடலை அவரே இசையமைத்து பாடியுள்ளார். "யுனிவர்சல் மியூசிக்' நிறுவனம் இந்த ஆல்பத்தை தயாரித்துள்ளது. மும்பையில் நடைபெற்ற பாடல் வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான், ஐ.நா.,வின் மில்லினியம் திட்ட பிரசார இயக்கத்தின் இயக்குனர் சலில் ஹெட்டி, யுனிவர்சல் மியூசிக் மேலாண் இயக்குனர் கக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த 2000 புத்தாண்டின் போது, ஐ.நா., சார்பில் மில்லினியம் திட்டம் அறிவிக்கப்பட்டது. உலகின் 189 நாடுகளின் பங்கேற்புடன் இந்த லட்சியங்களை நிறைவேற்றுவது என உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில், வறுமை ஒழிப்பும் ஒரு அம்சம். எதிர்வரும் 2015ம் ஆண்டுக்குள் உலகத்தை வறுமை, நோய் நொடி மற்றும் பசி பட்டினியின் பிடியில் இருந்து மீட்பது என்ற லட்சியத்துக்காக அனைத்து நாடுகளும் போராடுவது என உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த லட்சிய திட்டத்துக்கு உதவும் வகையில் இந்த இசை ஆல்பத்தை ஏ.ஆர்.ரஹ்மான் அமைத்துள்ளார். ஐ.நா.,வின் மில்லினியம் திட்ட இயக்கம் தனது உலகளாவிய வறுமை ஒழிப்பு பிரசாரத்துக்கு இந்த பாடலை அதிகாரப்பூர்வமாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில், ""பசி எல்லாலோருக்கும் பொதுவானது. பசியை எல்லோரும் உணர முடியும். வறுமையை ஒழிக்க வேண்டும் என்பதில், உலகத்துக்கு இந்தியா உரைக்கும் ஒரு அறிக்கையாக இந்த பாடல் திகழும். வறுமையை ஒழிப்பதற்கு இந்த பாடல் ஒரு தீர்வு அல்ல. உலகின் பல இடங்களில் நம்முடைய சகோதரர்கள் பசி பட்டினியுடன் இருப்பதை தடுக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தும் உந்து சக்தியாக இந்த பாடல் இருக்கும்,'' என்றார்